×

பள்ளிப்பட்டு சாலையில் விவசாயி பலி; கல்லூரி பேருந்தை சிறைபிடித்து மக்கள் மறியல்: டிரைவர் கைது

ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை தாலுகா, வெள்ளத்தூர் கிராமத்தில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆர்.கே.பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரி பேருந்து மூலமாக சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் மாணவர்களை ஏற்றிச் செல்ல அக்கல்லூரி பேருந்து ஆர்.கே.பேட்டை அருகே யு.ஆர்.கண்டிகை கிராமத்துக்கு சென்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு, அப்பேருந்து ரிவர்சில் வந்தது. அப்போது அங்கு சாலையோரத்தில் பைக்மற்றும் நண்பர் ராமமூர்த்தியுடன் நின்றிருந்த விவசாயி சுப்புராஜ் (56) என்பவர்மீது, ரிவர்சில் வந்த கல்லூரி பேருந்து மோதியதுடன் ஏறி இறங்கியது.

டிரைவரின் கவனக்குறைவினால் ஏற்பட்ட இவ்விபத்தில், விவசாயி சுப்புராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் வந்த நண்பர் ராமமூர்த்தி கீழே குதித்து உயிர் தப்பியதில் படுகாயம் அடைந்தார். இதை பார்த்ததும் கல்லூரி பேருந்து டிரைவர் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இவ்விபத்தை பற்றி அறிந்ததும் கே.ஜி.கண்டிகை-பள்ளிப்பட்டு சாலையில் விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பேருந்தை சிறைப்பிடித்து, 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில் ஆர்.கே.பேட்டை போலீசார் விரைந்து வந்தனர்.

அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கவனக்குறைவினால் விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பேருந்து டிரைவரை கைது செய்து, அப்பகுதியில் விபத்து நடைபெறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, விபத்தில் பலியான விவசாயி சுப்புராஜின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post பள்ளிப்பட்டு சாலையில் விவசாயி பலி; கல்லூரி பேருந்தை சிறைபிடித்து மக்கள் மறியல்: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pallipattu road ,R.K.Pettai ,Vellathur village ,R.K.Pettai taluka ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED கோஷ்டி மோதலில் 2 பேர் கைது