×

மெடிக்கலில் செல்போன் திருடிய பெண் கைது

சேலம், டிச.30: சேலம் களரம்பட்டி நேதாஜி தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி மனைவி பேபிலட்சுமி (22). இவர், களரம்பட்டி மெயின்ரோட்டில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 24ம் தேதி, பேபிலட்சுமி மெடிக்கலில் இருந்தபோது, ஒரு பெண் மருந்து வாங்க வந்துள்ளார். அப்போது பேபிலட்சுமி தனது செல்போனை மேசை மீது வைத்து விட்டு, மருந்து எடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். அந்த நேரத்தில், செல்போனை திருடிக்கொண்டு அப்பெண் தப்பிச்சென்றார். இதுபற்றி கிச்சிப்பாளையம் போலீசில் பேபிலட்சுமி புகார் கொடுத்தார். எஸ்ஐ ராஜா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் திருட்டில் ஈடுபட்ட பெண் குறித்து விசாரித்து வந்தனர்.

நேற்று முன்தினம், செல்போன் திருட்டில் ஈடுபட்ட பெண், அதே மெடிக்கல் முன்பு நடந்து சென்றதை பார்த்த பேபிலட்சுமி, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடம் வந்த போலீசார், அப்பெண்ணை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர்காடு பகுதியை சேர்ந்த பாட்சா மனைவி ஜன்மா(39) எனத்தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை, சேலம் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அங்கு, தன்னை பெண் போலீசார் தாக்கியதாக மாஜிஸ்திரேட்டிடம் ஜன்மா தெரிவித்தார். இதனால் அவரை மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தார். உடனே சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்து பரிசோதித்தபோது, அவரது உடலில் எந்த காயமும் இல்லை, நல்ல நிலையில் இருக்கிறார் என மருத்துவர்கள் அறிக்கை அளித்து அனுப்பி வைத்தனர். பின்னர், கைதான ஜன்மாவை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி, அவரது உத்தரவின்பேரில் சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைத்தனர்.

 

The post மெடிக்கலில் செல்போன் திருடிய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Parthasarathy ,Babililakshmi ,Netaji Street, Kalarampatti, Salem ,Kalarampatti Main Road ,
× RELATED திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலில்...