×

யானை தந்தம் கடத்திய 5 பேர் கைது

மேட்டூர், ஜன.3: மேட்டூர் அருகே யானை தந்தம் கடத்திய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் ஏழரைமத்திக்காடு பகுதியில் சிலர் யானை தந்தங்களை பதுக்கி வைத்துள்ளதாக சேலம் மாவட்ட வன அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் மற்றும் வனத்துறையினர் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இதில், யானை தந்தம் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் சிக்கினார். அவர் மூலம் மற்றவர்களை தொடர்பு கொண்டு யானை தந்தம் வாங்க விரும்புவதாக கூறி விலை பேசியுள்ளனர். இதையடுத்து, சொகுசு காரில் யானை தந்தங்களை எடுத்துக் கொண்டு 3 பேர் வந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக காருக்கு முன்னும் பின்னும் நோட்டமிட்டபடி இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். குறிப்பிட்ட இடத்திற்கு சொகுசு கார் வந்தவுடன் யானை தந்தம் வாங்குவது போல் நின்றிருந்தவர் சைகை செய்துள்ளார். உடனே, காருடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அருகே வந்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் தந்தத்தை காரில் கடத்தி வந்தவர்கள் மேட்டூர் அருகே கோவிந்தபாடியைச் சேர்ந்த சின்னப்பையன் மகன் பழனி(48), தலைவாசல் வெங்கடாஜலம் மகன் செல்வகுமார்(40), குரும்பனூர் ரங்கசாமி மகன் பெருமாள்(50), ஏழரைமத்திக்காடு சின்னமாலி மகன் ஒண்டியப்பன்(59) மற்றும் வாழப்பாடியைச் சேர்ந்த தாண்டவராயன் மகன் அருணாசலம் (46) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 7 கிலோ எடை கொண்ட 4 தந்தங்கள் மற்றும் கார், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் தந்தங்கள் அனைத்தும் 20 ஆண்டுக்கு முன்பு மேட்டூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையிடமிருந்து எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். இந்த வனப்பகுதியில் வீரப்பன் கும்பல் யானை தந்தம் கடத்தியதாக கூறுவதுண்டு. தற்போது, மீண்டும் யானை தந்தம் கடத்தல் தலை தூக்கியுள்ளதால் வனத்துறையினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

The post யானை தந்தம் கடத்திய 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mettur ,forest ,Salem District ,Forest Officer ,Kolathur Ezharaimathikadu ,Salem ,
× RELATED மேட்டூர் சோதனைச்சாவடி மோதல் விவகாரம்;...