மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதியான குருபகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசனாகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய காலமாக மார்கழியைக் தேர்ந்தெடுத்தார்கள் நம் முன்னோர்கள். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி வழியில் என்னை அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டவே என்பதை நாம் உணர வேண்டும்.
பெண்களை ஏன் எல்லா விரதங்களிலும் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்?
நம் சாஸ்திரங்களும் வேதங்களும் பெண்ணை எதற்கும் ஒப்பிட முடியாத ஓர் உயரிய இடத்தில் வைத்துள்ளது. பெண் என்பவள் 6 விதமான தன்மைகளைக் கொண்டவள். அவளே தெய்வம், மனைவி, குரு, நண்பன், ஆசான், போதகன் (செயல்திறன்) என்று ஒரு ஆணுக்கு அமைகின்றாள். அந்தப் பெண்ணின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் அந்த குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும். இதனால்தான் பெரும்பாலான விரதங்களில் பெண்களின் பங்கு அதிகம் உள்ளது.’’
அதிகாலையில் கோலமிடுவது ஏன்?
பூலோகத்தில் எந்த மனிதரும் தவறுகள் செய்யாமலில்லை. அறிந்தும், அறியாமல் செய்யும் தவறுகள். நடக்கும் போது நம் கால் பாதம் பட்டு எறும்பு, பூச்சி போன்ற பல உயிர்கள் இறக்கின்றன? இதுவும் ஒருவகை பாவம்தானே? இதனால் ஏற்படும் தோஷத்தினால் கன்னிப் பெண்களுக்கு திருமணத் தடை வரும். இதைத் தவிர்க்கவே பெண்கள் வாசலில் அரிசி மாவினால் அழகிய வண்ண கோலம் போடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. மழையினால் உணவுக்கு வழியில்லாமல் இரவு முழுவதும் அடைந்து கிடக்கும் சிறு உயிரினங்கள் அதிகாலையில் வெளிவந்து தமக்குத் தேவையான உணவாக அரிசி மாவைத் தேடி வந்து உண்ணும். அப்படி அந்த உணவினை சிறு உயிரினங்களுக்கு அளித்த பெண்களுக்கு, தோஷங்கள் அகலுவதாக நம்பப்படுகிறது.
சாணத்தின் மேல் ஏன் பூ வைக்க வேண்டும்?
‘‘சாணத்தின் மீது வைக்கும் பூக்களின் தேனை உறிஞ்சுவதற்காக வரும் தேனீக்களுக்கு உணவு கிடைப்பது மட்டுமின்றி, சாணத்தின் பயனால் அந்தத் தேனீயின் விஷமும் எடுக்கப்படுகிறது.இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய நல்ல விஷயங்களை அடக்கிய மார்கழி மாதக் கோலங்களால் பெண்களின் கற்பனைத் திறன் வளர்வதுடன். ஒருமுக சிந்தனை ஏற்பட்டு அறிவும் கூர்மையாகும்.’’
பாவை நோன்பு என்றால் என்ன?
பண்டைய காலத்தில் ஆண்டாள் இந்த மார்கழி மாதத்தில் தினம் ஒரு பாசுரமாகப் பாடிச் சென்று, தான் மட்டும் பெருமாளைப் பார்த்து பலன் அடையக் கூடாது என்றும், தன் தெருவிலிருந்த கன்னிப் பெண்களும், குழந்தை இல்லாதவர்களையும் தன்னோடு அழைத்துச் சென்று, தன் மனம் கவர்ந்த கண்ணனின் முன் நின்று ‘நீயே என் கணவனாக வர வேண்டும்’ என்று வழிபடுகிறாள். அதோடு ஆண்டாளுடன் சென்ற பெண்களும் கண்ணனுடன் ஐக்கியமாகி தாங்கள் நினைத்ததை அடைகின்றனர். அதிகாலை எழுந்து நல்ல மனதுடன் தனக்குச் சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்றும் நம்பிக்கையுடன், நல்ல காற்றை சுவாசித்து விரதம் மேற்கொள்ளும்போது அப்பெண்ணிடமிருந்த தீய எண்ணங்கள் விலகி, மன ஆரோக்கியம் ஏற்பட்டு அவள் நினைத்த மாதிரி நல்ல கணவனை அடைய வழி கிடைக்கும்.
ஜெயசெல்வி
The post உள்ளத்தை கவரும் மார்கழி திங்கள் appeared first on Dinakaran.