×

சுந்தரனைத் துதிப்போம் துன்பங்கள் துடைப்போம் :அனுமத் ஜெயந்தி

1. முன்னுரை

மார்கழி மாதம் பிறந்து விட்டாலே அற்புதமான ஆன்மிக நிகழ்வுகள் நம்மைப் பரவசப்படுத்தும். முதலில் மார்கழி மாதமே புனிதமான மாதம். தனுர் மாதம் என்று சொல்வார்கள். வழிபாட்டுக்கென்று உருவான மாதம். ஆடி மாதம் அம்மன் கோயில்களில் மாலை நேர வழிபாடு விசேஷமாக இருக்கும். ஆனால் மார்கழி மாதம் எல்லா வைணவ, சைவ ஆலயங்களிலும் காலை வழிபாடு விசேஷமாக இருக்கும். மார்கழி மாதத்தில் எங்கு பார்த்தாலும் திருப்பாவை திருவெம்பாவை ஒலித்துக் கொண்டிருக்கும்.

பகவானுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடும் உத்தமமான மாதம் மார்கழி மாதம். இந்த மார்கழி மாதத்தில் திருவாதிரையில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடைபெறும். இதனோடு மார்கழியில் அனுமனுக்கு சிறப்பான விழாவாகிய அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அனுமன் ஜெயந்தியின் சிறப்புகளைப் பற்றியும் அனுமனின் பெருமையைப் பற்றியும்முத்துக்கள் முப்பது தொகுப்பில் காண்போம்.

2. கணக்கில்லாத அனுமன் ஆலயங்கள்

நாட்டில் ஏராளமான சிவாலயங்கள் உள்ளன. திருமாலுக்கு வைணவ ஆலயங்கள் உள்ளன. அம்மனுக்கு பிரதானமான அம்மன் ஆலயங்கள் உள்ளன. முருகனுக்கு சிறப்பான ஆலயங்கள் உள்ளன. ஆனால், ஆலயங்கள் எண்ணிக்கையில் அதிகமான எண்ணிக்கை இரண்டு தெய்வங்களுக்கு மட்டுமே இருக்கின்றன. ஒன்று விநாயகர். அவர் மிக எளிதாக எல்லா ஊர்களிலும் இருப்பார். எல்லா தெருக்களின் முனையிலும் இருப்பார். இன்னும் சொல்லப் போனால் அவரவர்கள் வீட்டு சுற்றுச் சுவரில் கூட ஒரு சின்ன விநாயகர் இருப்பார்.

அவருக்கு முறையான வழிபாடுகள் நடைபெறும். அதற்கு அடுத்து மிக அதிகமான கோயில்கள் இருப்பது அனுமனுக்குத்தான். அனுமன் ராம பக்தன். ராமருக்கு இருக்கும் ஆலயங்களை விட ராம பக்தனாகிய அனுமனுக்கு ஆலயங்கள் மிக அதிகம். பக்தியில் சிறந்த தொண்டனுக்கு எப்பேர்பட்ட சிறப்பை நம்முடைய சமயம் தந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

3. மூலத்தில் அவதாரம்

அனுமனின் ஜெயந்தி தினம் மார்கழி மாதம் அமாவாசை அன்று கொண்டாடப்படுகிறது. அனுமன் அவதார திருநட்சத்திரம் மூலம். இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா டிசம்பர் 30 திங்கட்கிழமை சிறப்பாக அவதாரம் கொண்டாடப்பட இருக்கிறது. அனுமனின் திருநட்சத்திரம் மூலமும் அமாவாசை திதியும் அன்று இணைந்து வருவது விசேஷம். அதிகாலை நான்கு மணி வரை சதுர்த்தசி இருக்கிறது அது முடிந்து அன்றைக்கு முழுமையாக அமாவாசை இருக்கிறது.

மூலமும் அமாவாசையும் மிகச் சிறப்பாக சேர்ந்து வருகின்ற அமைப்பு இந்த ஆண்டில் சிறப்பு. அமாவாசையானது திங்கட்கிழமை வருவதால் அமாவாசைக்கும் தனிச் சிறப்பு உண்டு. சோம அமாவாசை என்று பெயர். சோமன் என்றால் திங்கட்கிழமை. திங்கட்கிழமை வருகின்ற அமாவாசையில் அரச மர பிரதட்சணம் விசேஷமானது. இம்முறை அப்படிப்பட்ட விசேஷமான நாளில் நிகழ்கிறது.

4. ஞானத்தில் சிறந்த அனுமன்

அனுமனின் திருநட்சத்திரம் திருமூலம். பொதுவாகவே மூலம் ஞான நட்சத்திரம் என்பார்கள். காரணம் கலைவாணி சரஸ்வதி தேவியின் நட்சத்திரம் மூலம். ஆச்சாரியாரான சுவாமி மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரம் மூலம். சைவத்தில் திருமூலரின் நட்சத்திரம் மூலம். இப்படி ஞானம் நிறைந்தவர்கள் அவதார நட்சத்திரமாக அமைந்திருப்பது மூலம். எனவே தான் மூல நட்சத்திரத்தில் அவதரித்த அனுமன் ஞானத்தில் சிறந்தவராக, விளங்கினார். இராமனே தம்பியிடம், ‘‘இலக்குவா, இவன் சகல வேதங்களையும் கற்ற மிகப்பெரிய பண்டிதன்.

இவன் பேசுவதைப் பார்த்தால் இவன் கல்லாத கலைகளே உலகத்தில் இல்லை போல் தெரிகிறதே! ‘‘யார் கொல் இச்சொல்லின் செல்வன்?’’ என்று கேட்கும் படி அவருடைய ஞானம் சிறந்து விளங்கியது அதுவும் மார்கழி மாதம் என்பதால் குருவின் ராசியில் (தனுசு), ஞானத்தைக் கொடுக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் (மூலம்) அவருடைய அவதாரம் நிகழ்ந்திருப்பது மிகப்பெரிய சிறப்பு.

5. அவதார ரகசியங்கள்

அனுமனை வழங்கினால் சகல தேவதைகளின் அருளும், நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும் என்பார்கள். சனிக்கிழமை அவருக்கு விசேஷமான நாள். சனியின் தொல்லைகளான ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, ஜன்மச் சனி, கண்டச் சனி முதலிய கிரக தோஷங்கள் நீங்குவதற்கு அனுமனை வணங்க வேண்டும். அதனால் தான் சனிக்கிழமை பெரும்பாலும் அனுமன் ஆலயங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஆண்டு அனுமத் ஜெயந்தியன்று அமைந்திருக்கும் கிரக நிலைகள் இந்த உண்மையைச் சொல்லும்.

அவதார நட்சத்திரம் மூலம் என்பதால் கேது ராகு இவர்களின் தொடர்பு கிடைத்து விடுகிறது. கேது மிகச் சிறிய உண்மையையும் ரகசியத்தையும் வைத்திருக்கக் கூடிய கிரகம். ராகு எதையும் பிரம்மாண்டமாகச் செய்யக்கூடிய கிரகம். அனுமன் தன்னுடைய அஷ்ட மகா சித்தியினால் தன்னைச் சுருக்கி கொண்டதையும் அதே சமயத்தில் விஸ்வரூபம் எடுத்து படம் விரித்த பாம்பின் தலை போல், அண்ட மகுடம் இடிக்க பிரம்மாண்டமாய் வளர்ந்ததையும் ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் நாம் காண முடியும். எனவே விதையும் விருட்சமாய் இருப்பவர் அனுமன்.

6. மார்கழி மாத அமாவாசை

தனுசு ராசியில் மார்கழி மாத அமாவாசை நிகழ்வதால் தனுசு ராசிக்குரிய குருவின் திருவருளும், அமாவாசை திதி நிகழ்வதால், சூரிய சந்திரர்களின் சேர்க்கையும், சூரியனோடு புதன் இணைந்து இருப்பதால் அறிவாற்றல் மிக்க புதனின் திருவருளும் கிடைத்து விடுகிறது. அனுமத் ஜெயந்தியன்று சூரியன் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் இருப்பதால் சுக்கிரனுடைய திருவருளும், அந்த சுக்கிரன் சனியோடு இணைந்திருக்கும் நிலையில் சனியின் திருவருளும், அந்த சுக்கிர சனி சேர்க்கையை கடக ராசியில் இருந்து எட்டாம் பார்வையாக செவ்வாய் பார்ப்பதால் செவ்வாயின் திருவருளும் கிடைத்து விடுகின்றது. இந்த ஆண்டு நிகழும் அனுமத் ஜெயந்தி விழா கிரக ரீதியாகவும் மிகச்சிறந்த நாளாக அமைந்து விடுகிறது. அன்றைய நாளில் செய்யும் வழிபாடு நமக்கு ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தரும்.

7. எட்டெழுத்தின் சுருக்கமே ஈரெழுத்து நாமம்

ராமாயணத்தில் ராமனின் மிகச்சிறந்த தொண்டனாக விளங்குபவர் அனுமன். ராமன் கடக ராசியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். புனர்பூசம் குருவின் நட்சத்திரம் அந்த குருவின் ராசியான தனுசு ராசியில் அவதரித்தவர் அனுமன். எனவே ராமனுக்கும் அனுமனுக்கும் உள்ள தொடர்பு கிரக ரீதியாக விளங்குகிறது. கடக ராசிக்கு ஆறாவது ராசி தனுசு ராசி. இந்த தனுசு ராசி பலம் அடைந்ததால் ஆறாவது ராசிக்குரிய பலனான எதிரிகளை வெல்வது ராமனுக்கு எளிதாக அமைந்தது.

அதே சமயத்தில் தனுசு ராசிக்கு எட்டாவது ராசி ராமனின் கடக ராசி. எட்டாவது ராசி என்பது எதையும் எட்டிப் பிடிக்க வைக்கும். முயற்சியையும் அந்த முயற்சியின் போது நிகழும் துன்பங்களையும், அதற்கு பின் வெற்றியையும் சொல்வது எட்டாவது ராசி. ராம காரியமாக கடலைக் கடந்த பொழுது அனுமன் எத்தனைச் சிரமப்பட்டார் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். அவைகளை எல்லாம் கடக்க உதவியது ராம நாமமல்லவா. ராம நாமம் என்பது அஷ்டாட்சர (எட்டேழுத்து) மந்திரத்தின் சுருக்கமாகும்.

8. ஹனுமான் பெயர்க்காரணம்

சமக்கிருதத்தில் ‘‘ஹனு’’ என்பதற்கும் ‘‘தாடையும்’’, ‘‘மன்’’ என்பதற்குப் ‘‘பெரிதானது’’ என்பதால், ‘‘ஹனுமன்’’ என்பதற்குப் பெரிய தாடையை உடையவன் என்று பொருள். அஞ்சனை மகன் என்பதால் அனுமன் என்றும் அழைப்பர். இதை கம்பன் அனுமன் வாக்காகவே சொல்கிறான். (காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றின் வந்தேன். நாமமும் அனுமன் என்பேன்) என்ற பாடல் வரிகளால் அறியலாம். தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் போது தேவாம்சம் கொண்ட பாயசம் வந்தது.

தெய்வீக கட்டளை மூலம் பருந்து ஒன்று அந்தப் பாயசத்தின் ஒரு பகுதியை, வெகுகாலம் குழந்தையில்லா அஞ்சனா தேவி தவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்த காடுகளின் மீது பறக்கும் போது அதைத் தவறவிட்டது. வாயு பகவான், விழுந்த தெய்வீக பிரசாதத்தை அஞ்சனாவின் கைகளில் வழங்கினார், அவர் அதை உட்கொண்டதன் விளைவாக அனுமன் அவளுக்குப் பிறந்தான் எனவும் கூறுகிறது.

9. அனுமன் அவதரித்த இடம் திருமலையா? கிஷ்கிந்தையா?

ராமாயணம் அனுமனின் பிறப்பிடம் கிட்கிந்தை எனக் கூறுகிறது. மகரிஷி வேத வியாசர் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலை (ஏழு மலைகளில் ஒன்று) அனுமன் பிறந்த இடம் என கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகில் உள்ள அஞ்சநேரி அல்லது கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம். ஹம்பி அருகேயுள்ள அஞ்சனாத்திரி மலை கிட்கிந்தை என்று பலராலும் கூறப்படுகிறது. அனுமன் இந்த மலையில்தான் அவதரித்தார் என்று சொல்பவர்களும் உண்டு. இதனை உறுதிப்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் 6 நிபுணர்கள் கொண்ட குழுவை நியமித்து புராணங்களை ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவாக அஞ்சனாத்ரி அனுமனின் அவதார இடமாக கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

10. ஹம்பியில் அனுமனின் அவதாரத்தலம்

அனுமனின் அவதாரத்தலம் திருமலைதான் என்று சொன்னாலும் வேறு சில ஆய்வாளர்கள் ஹம்பி தான் என்கின்றனர். அதைப்பற்றியும் பார்த்து விடுவோம். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோவில். (யந்த்ரோ தரகா அனுமன் கோயில்). மத்துவ துறவியான வியாசதீர்த்தரால் பாடப்பெற்ற தலமாகும்.

துங்கபத்ரா நதிக் கரையில் அமைந்துள்ள இயற்கை வனப்புடன் கூடிய மலைப் பகுதியில் உள்ள இந்தக் கோயிலுக்குச் செல்ல மலைமீது ஒரு சமயத்தில் இருவர் மட்டுமே நடக்கக் கூடிய அளவில் குறுகலான படிகள் உள்ளன. 550 படிகளைக் கடந்து மேலே சென்றால் கோவிலை அடையலாம். ஆஞ்சனேயர் பிறந்த இடம் என்பதால் மலை உச்சியிலும் செல்லும் வழியிலும் ஏராளமான வானரங்களைப் பார்க்கலாம். வெள்ளையடிக்கப்பட்ட வெண்மை நிறச்சுவர் கொண்ட சிறிய கோயில் இது. தூரத்திலிருந்தே இந்தக் கோவிலின் மீதுள்ள கூம்பு வடிவுள்ள மாடத்தில் பறக்கும் காவிக் கொடியைக் காணலாம்.

11. சுக்ரீவ பட்டாபிஷேகம் நடந்த இடம்

கோயிலின் முன்னே தீப ஸ்தம்பமும் துளசி மாடமும் உள்ளன. முன் மண்டபமும் அதை அடுத்து கர்ப்பக்ரஹமும் உள்ளன. ஆஞ்சநேயப் பெருமான் செந்தூரக் காப்பில் அருள் மிகு தோற்றத்துடன் காட்சி அளிப்பதைக் கண்டு களிக்கலாம். ஹனுமத் ஜெயந்தி அன்று ‘ஸ்ரீ ராம் கீ ஜெய்’ என்ற கோஷமிட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு திரளாக வந்து ஆஞ்சநேயரை வழி படுகின்றனர். சீதையைத் தேடி வந்த ராமரும் லட்சுமணரும் இந்தப் பகுதியில் வரும் போது ஹனுமார் அவர்களைச் சந்தித்து அவர்களை சுக்ரீவனுடன் நட்புக் கொள்ளச் செய்து ராம சேவையில் இறங்கினார்.

இந்தப் பகுதியில் உள்ள மாதங்க மலை மதங்க மஹரிஷியின் பெயரால் அமைந்துள்ளது. “இந்தப் பகுதியில் நுழைந்தால் உனக்கு மரணம் ஏற்படும்” என்று வாலிக்கு மதங்க மஹரிஷி சாபமிட்டதால் வாலியால் இந்தப் பக்கமே வரமுடியவில்லை. இந்த மலையே ஹம்பியில் உயரமான இடம். இங்குள்ள விட்டலர் கோயில் அருகேயே ராமரால் வதம் செய்யப்பட்ட வாலி எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வாலியின் கோட்டை இருந்த பகுதியைச் சுட்டிக் காட்டுவதாக இங்குள்ள வாலி குகை திகழ்கிறது. சுக்ரீவனின் பட்டாபிஷேகம் நடந்த இடமும் இந்தப் பகுதியில் தான் என்கின்றனர்.

12. ஐந்து சகோதரர்கள்

ஆஞ்சநேயருக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள் பிரம்மாண்ட புராணத்தில் இந்த செய்தி உள்ளது. இவர்கள் ஐந்து பேரும் ஆஞ்சநேயருக்குப் பிறகு பிறந்தவர்கள். ஸ்ருதிமான், மதிமான், கேதுமான், கட்டுமான் மற்றும் த்ரிதிமான் ஆகியன அவர்களின் பெயர்கள். இவர்கள் ஐந்து பேருக்கும் குடும்பம், குழந்தைகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.

1. மதிமான் – மதிமான் மிகுந்த புத்திகூர்மை உடையவர். ஞானத்தின் அடையாளமாக திகழ்பவர். ராஜதந்திரம் மற்றும் பேச்சுத்திறமை மிக்கவர்.

2. ஸ்ருதிமான் – ஸ்ருதிமான் பெரும் அறிஞர். வேதங்களை பற்றி சிறந்த ஞானம் பெற்றவர். ஜோதிடம், வானியல் மற்றும் இலக்கியத்தில் கை தேர்ந்தவர்.

3. கேதுமான் – கேதுமான் மிகப் பெரிய போர் வீரர். தீயவர்களுக்கு எதிராக போரிட்டு அழிக்கக் கூடியவர். ஆயுதங்களை கையாள்வதில் திறமை பெற்றவர். போர் கலைகள், நுணுக்கங்கள் அனைத்தும் தெரிந்தவர்.

4. த்ரிதிமான் – அனைவருக்கும் இளையவர் த்ரிதிமான். மிகவும் உற்சாகமான, குறும்புத்தனங்கள் நிறைந்தவர். இவர் அனுமன் மீது அளவு கடந்த பற்றும், பாசமும் கொண்டவர்.

5. கதிமான் – கதிமான் மரம் ஏறுதல், அதிக தூரம் தாவுதல் ஆகிய திறமைகளை பெற்றவர்கள். எவ்வளவு உயரமான மரத்திலும் விரைவாக ஏறும் திறன் கொண்டவர் இவர்.

13. பஞ்ச பூதங்களும் அனுமனும்

பஞ்ச பூதங்கள் எல்லோரையும் அடக்கும். ஆனால் அனுமனிடம் பஞ்ச பூதங்களும் அடங்கும். இதனை விவரிக்கும் பாடல் இது.

அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆர் உயிர் காக்க ஏகி (ஆரியர்க்காக ஏகி)
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான்.
இந்தப்பாடலை தினசரி சொல்ல வேண்டும். அனுமனின் உயர்ந்த துதிகளில் ஒன்று இது.

14. அற்புதப் பொருள் தரும் பாடல்

மேற்படி பாடலைச் சாதரணமாகப் படிக்காமல் பொருள் உணர்ந்து படிப்பது சிறப்பு. இதன் பொருள்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி.
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஸ்ரீராமனுக்காக சென்று.
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் -ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு.
அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்.
அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்.

15. மெய் சிலிர்த்த வால்மீகி

வால்மீகி ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறினார். அங்கே பாறைகளின் மீது சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஸ்ரீராமனின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்தரிப்பதாக அமைந்திருந்த அவற்றைப் படித்த வால்மீகிக்கு மெய் சிலிர்த்தது. யார் இதை உருவாக்கியிருப்பார்கள் என்று சிந்தித்த போது அருகிலே ஓர் சிறு குகையில் அனுமன் ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்ததைக் கண்டார். நிஷ்டையிலிருந்து விழித்தெழுந்த அவரிடம், கல்வெட்டுக்களாக அமைந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டார் மஹரிஷி. அதற்கு அனுமன் பதில் சொன்னார், ‘‘ஸ்ரீராமனின் கல்யாண குணங்களையும் அவரது பெருமைகளையும் இங்கே காணும் கற்களில் நான்தான் எனது நகத்தால் செதுக்கி வைத்தேன்!” என்றார்.

16. தங்கள் ராமாயணம் தான் நிலைத்து நிற்கும்

அப்போது வால்மீகி மஹரிஷியின் கண் களில் நீர் கசிந்ததை அனுமன் கவனித்தார். ‘‘மஹாப்ரபோ! நீர் எழுதிய காவிய வரிகளில் காணும் பக்திப் பரவசம் என்னை நெகிழ வைத்துவிட்டது. நான் எழுதிய ராமாயணம் இதற்கு இணையாகாது. உம்முடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்” என்றார். அனுமன் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வால்மீகியை வணங்கி, ‘‘தாங்கள் எழுதிய ஸ்ரீராம காவியமே மிகச் சிறப்பானது! நான் செதுக்கியது என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புதான். தங்கள் ராமாயணம் தான் நிலைத்து நிற்கும். ‘‘அடுத்து அனுமன் சற்றும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தைச் செய்தார். தான் எழுதிய ராமாயணத்தை கட கடவென்று வாலினால் அழித்தும் விட்டார். வான்மீகி வியந்து போனார். என்ன ஒரு தியாகம்….” அனுமனே! நீர் எழுதிய ராமாயண எழுத்துக்களை அழித்து விட்டீர். ஆனால், எமது ராம காவியத்தில் நீர் செதுக்கிய ராம கதையும் இடம் பெறும்” என்று கூறி, வாழ்த்திச் சென்றார்.

17. தியாகராஜ ஸ்வாமிகள் வாழ்வில் அனுமன்

அனுமன் தொடர்பான ஒரு அழகான கதை உண்டு. தியாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீராமரின் சிறந்த பக்தர். 24000 பாடல்களுக்கு மேல் இயற்றியவர். இப்போது 700 பாடல்கள்தான் கிடைத்திருக்கின்றன. அவர் இயற்றிய பெரும்பாலான கிருதிகள் ராமரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஏறக் குறைய ஒவ்வொரு பாடலிலும் ராமனிடம் தனக்கு தரிசனம் தருமாறு வேண்டுவார். குழைவார். கெஞ்சுவார். சமயங்களில் ராமருடன் உரிமையாக கோபித்துக்கொள்வார். ஒரு நாள் மாறுவேடத்தில் ஸ்ரீராமர் வந்தார்.

அவருடன் அனுமனும் சீதையும் இருந்தார்கள். தியாகராஜருக்கு வந்திருப்பது ஸ்ரீராமன் தான் என்று புரியவில்லை. இருந்தாலும் அதிதி பூஜை செய்தார். இரவு உணவு உண்ணும் படி அவர்களை வற்புறுத்தினார். அவர்கள் அமர்ந்ததும், அனுமன் ஒவ்வொரு உணவையும் தன் கையால் வழங்க, தியாகராஜர் தானே உணவை வழங்குவதாக வற்புறுத்தி அவரை ஒதுக்க, அனுமன் திடுக்கிட, ராமர் அனுமனை அமைதிப்படுத்தினார். ஜாடையில் உன்னைப்போலவே தியாகராஜரும் சிறந்த பக்தர் என்று கூறி, அவருக்கு சேவை செய்ய அனுமதி தந்தார்.

18. ஆஞ்சநேய பீடம்

ஆஞ்சநேய பகவானை குரு ஸ்தானத்தில் வைத்து வணங்குவது மரபு. ஸ்ரீ ராமாயணம் சொல்லும் போது ஆஞ்சநேயருக்கு ஒரு தனி பீடம் போட்டு விடுவார்கள். அவர் சூட்சுமமாக வந்து ராமாயணக் கதையை கேட்பார். ஆகையினால் சுவாமிக்கு வழிபாடு செய்யும்பொழுது ஆஞ்சநேய பீடத்திற்கும் ஒரு விளக்கு வைத்து வெற்றிலை பாக்கு பழங்கள் வைத்து வழிபட்ட பிறகு ஸ்ரீராமாயண பாராயணத்தையோ காலஷேபத்தையோ தொடங்குவது மரபு. வியாச பீடம் போல் இதற்கு அனுமத் பீடம் என்று பெயர். பல இடங்களில் இராமாயண உபன்யாசத்தின் போது குரங்குகள் வருவதும், சில நேரங்களில் அது வரை பார்த்திராத யாரோ ஒரு பெரியவர் வந்து கதையக்கேட்பதும், கதை முடிந்த பிறகு அவர் யார் என்று தெரியாமல் இருப்பதும் பல பெரியவர்கள் சொல்லி யிருக்கிறார்கள்.

19. எப்படிக்கேட்க வேண்டும்?

நவ வித பக்தியில் சிரவணம் தான் முதலில் வருகிறது. கற்றிலனாயினும் கேட்க என்றார் வள்ளுவர். இராமாயணம் கேட்பதற்கே சிரஞ்சீவியான ஆஞ்ச நேயர் இந்த பூலோகத்தில் இருக்கிறார். ஆஞ்சநேயர் இராமாயணத்தை எப்படிக் கேட்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகின்றார் அதற்கான ஒரு ஸ்லோகம் உண்டு. எந்த இடத்தில் எல்லாம் ராமருடைய பெருமையைப் பேசுகின்றார்களோ அல்லது பாடுகின்றார்களோ (கீர்த்தனம்) அந்த இடத்தில் எல்லாம் அழையா விருந்தாளியாக தன்னுடைய எஜமானனின் பெருமையைக் கேட்பதற்காக ஆஞ்சநேயர் வந்து விடுவார். அப்படிக் கேட்கும் பொழுது ராமா என்கிற பெயர் வருகின்ற இடத்தில் எல்லாம் அவருடைய இரண்டு கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகும். அப்படி இராமாயணம் சொல்பவர்களை அவர் முழு மனதோடு ஆசிர்வதிப்பார். அவர்கள் உள்ளத்தில் இருந்த அத்தனை அரக்க குணங்களும் மாறி சாத்வீர்களாக மாறுவார்கள். இராமாயணத்தில் ராட்சசர்களுக்கு எப்படி எமனாக விளங்கினாரோ, அதைப்போல நம் மனதில் உள்ள ராட்சச குணங்களை அகற்றுவதில் எமனாக விளங்குவார்.
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள்’ இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள்.

20. தினசரி சொல்லுங்கள்

அனுமன் அருள் அபாரமானது. எல்லையில்லாதது. அவர் தராத வரங்கள் கிடையாது. ஒவ்வொரு தேவதையிடம் பெறுகின்ற அத்தனை வரங்களையும் அவரிடம் பெறலாம். நவகிரகங்களிடம் தனித் தனியாக பெறுகின்ற வரங்களையும் அனுமன் ஒருவரை வணங்குவதால் கிடைத்துவிடும் என்பது பெரியோர்கள் வாக்கு. அவரால் கிடைப்பது என்னென்ன தெரியமா? நல்ல அறிவு, ஆரோக்கியம், உடல் பலம், புகழ், தைரியம், இனிமையான பேச்சு, இப்படி எத்தனையோ வரங்கள் அனுமனை நம்பிக்கையோடு வணங்கும்போது கிடைத்துவிடும். இதைத்தான் இந்த ஸ்லோகம் கூறுகின்றது.

புத்திர் பலம் யஸோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதாம்
அஜாத்யம் வாக் பட்டுத்வம் ச
ஹனுமத் ஸ்மரன்னாத் பவேத்

இந்த ஸ்லோகத்தை தினசரி பாராயணம் செய்வதன் மூலமாக அனுமனின் அருளோடு மேற்கண்ட குணங்களையும் பெற முடியும். குறிப்பாக குழந்தைகள் இந்த ஸ்லோகத்தை தினசரி சொல்வது நல்லது.

21. இப்படியல்லவா பேச வேண்டும்

வாக்கு சாமர்த்தியம் உள்ளவன் என்று இராமனால் புகழப்பட்டவன் அனுமன். ஒருவன் தன்னை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அனுமன் ராமனிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் இடத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். ராமனிடம் சொல்லுகின்ற பொழுது அனுமன் மிகவும் சுருக்கமாக ஆனால் அத்தனை விவரங்களையும் ஒன்று விடாமல் தன்னைப்பற்றி கூறிவிடுகின்றான். அதில் விவரங்கள் இருக்கும் தற்பெருமை இருக்காது. விநயம் (அடக்கம்) இருக்கும். ஆர்ப்பாட்டமான சொற்கள் இருக்காது. உண்மை இருக்கும். இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் இருக்காது.

வேலைக்குப் போகின்றவர்கள் சுய விவரங்கள் கூறுகின்ற குறிப்பு (bio data) எழுதுவார்கள் அல்லது சுயவிவரத்தைச் சொல்லும்படி (self introduction) பேட்டியாளர் கேட்டால் சொல்வார்கள். இதற்காக பெரிய நிறுவனங்களிடம் பணம் கட்டி பயிற்சி பெறுவார்கள் ஆனால் ராமாயணத்தில் அனுமன் எப்படிப் பேசுகின்றான், சூழ்நிலைகளை எப்படிக் கையாளுகின்றான் என்பதை மட்டும் ஊன்றி முறையாக படித்துவிட்டு பயிற்சி செய்தால், எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பழக வேண்டும், எப்படிச் செயலாற்ற வேண்டும், எப்படி ஊக்கம் பெற வேண்டும், எப்படி தலைமைக்கு கட்டுப்பட வேண்டும், எப்படி சாதனைகளை செய்ய வேண்டும் என்பதை எல்லாம் மிக எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

22. அனுமன் பேச்சு குறித்து ராமன் மதிப்பீடு

ராமன் தன்னிடம் முதல் சந்திப்பில் அனுமன் அறிமுகப்படுத்தி கொண்ட விதத்தையும், விநயத்தையும் பார்த்து மதிப்பீடு செய்கிறான். அதை தம்பி இலக்குவனிடம் சொல்கிறான்.

1.பேசுகின்ற வார்த்தையைப் பார்த்தால், இவன் மிகச் சிறந்த கல்விமான். நான்கு வேதமும் ஆறங்கங்களோடு கசடறக் கற்ற பண்டிதன்.

2.சொற்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிகிறது.

3.மங்கலகரமான, நேர்மறைச் சொற்களைப் பயன்படுத்துகின்றான்.

4.எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பது தெரிந்திருக்கிறது.

5.வார்த்தை சிக்கனத்தோடு குழப்பமில்லாமல் தெளிவாகப் பேசுகின்றான்.

6.பொய்மையில்லாது பேசுகின்றான்.

எனவே இவன் “சொல்லின் செல்வன்”

23. விமர்சனம் செய்யாத பேச்சு

தேவையுள்ள வார்த்தைகளைப் பேசாமல் இருப்பதோ, தேவையற்ற வார்த்தைகளைப் பேசுவதோ நல்ல பேச்சுக்கே அடையாளமாகாது. அதைப்போல ஒருவர் கேட்காமல் பேசுவதும் தவறு. வீடணனைப்பற்றி ஒவ்வொருவரும் தங்கள் கருத்து கூற, ராமன், நிறைவாக, மற்றவர்கள் பேசுவதை எந்த விதமான விருப்பு வெறுப்பும் இல்லாமல் கருத்தை மட்டும் ஊன்றி கவனித்துக்கொண்டிருந்த அனுமனை கருத்து கூறும்படி, வாயால் கேட்கவில்லை. குறிப்பால் உணர்த்துகிறான்.

உறுபொருள் யாவரும் ஒன்றக்கூறினார்
செறி பெரும் கேள்வியாய் கருத்தென் செப்பு, என
நெறிதரும் மாருதி என்னும் நேர் இலா
அறிவனை நோக்கினான் அறிவின் மேல் உளான்.

திரண்ட அறிவுக்கு அடையாளம் என்பதால் அனுமனை பெயர் சொல்லமால் அறிவன் என்று கம்பன் காட்டுகின்றான். அனுமன் மிக அடக்கமாக எழுந்து மென்மையான குரலில் தன் கருத்துக்களைக் கூறும் அழகு அற்புதமாக இருக்கும். அதற்கு முன் பேசிய ஒருவரது கருத்தையும் விமர்சனம் செய்யாமல் தன் கருத்தை மட்டுமே மிக நேர்த்தியாக காரண காரியங்களோடு கூறுவான். அதனால் தான் அவன் சொல்லின் செல்வன்.

24. நாதமுனிகளும் அனுமனும்

நாத முனிகள் வைணவ ஆச்சாரியர். தலைமை ஆச்சாரியார். வைணவ வழிக் குரவர் மரபு இவரிடம் இருந்துதான் தொடங்குகிறது. காட்டுமன்னார்குடியில் அவதாரம் செய்தவர். ஆழ்வார்கள் அருளிய 4000 பாடல்களையும் தொகுத்து இயலோடும் இசையோடும் தந்தவர். ஒரு நாள் அவரைத் தேடி ஒரு வேடனும் வேடுவச்சியும் வேடன் தம்பியும், ஒரு குரங்கும் என நால்வர் வருகின்றார்கள். அப்பொழுது அவர் வீட்டில் இல்லை.

அதனால் அவர்கள் சென்று விடுகின்றனர். அவர் தம்முடைய இல்லத்துக்கு வந்த பொழுது வீட்டில் சொன்னார்கள். ‘‘தங்களைத் தேடி வேடுவர் தம்பதிகள் ஒரு குரங்கோடு வந்தார்கள். நீங்கள் இல்லை என்று சொன்னவுடன் போய் விட்டார்கள்’’. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் சற்று நேரம் சிந்தித்தவர் பிரகாசமானார். அவர் உள்ளுணர்வு யார் வந்தார்கள் என்பதை உணர்த்தியது. ‘‘ஆகா, கோட்டை விட்டுவிட்டோமே, வந்திருந்தவர்கள் சாட்ஷாத் ராம லட்சுமண சீதையுடன், அனுமன் அல்லவா! அவர்களைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே’’ என்று துடிக்கிறார்.

25. ஓடினார்

பரபரப்போடு அவர்களைத் தேடி வீதியில் இறங்கி ஓடுகின்றார். ஒவ்வொரு இடமாக ‘‘பார்த்தீர்களா பார்த்தீர்களா’’ என்று விசாரித்துக் கொண்டே போகின்றார். ‘‘ஒரு வேடுவன் வேடுவச்சி குரங்கோடு சென்றதை?’’ என்று ஒவ்வொருவரிடம் கேட்க, அவர்கள், ‘‘ம். பார்த்தோம் இந்த வழியாகத்தான் சென்றார்கள்’’ என்று சொல்ல, ‘‘இவர்கள் பார்த்த காட்சியைத் தான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே’’ என்று ஓடுகின்றார். கடைசியில் அவர் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் செம்போடை என்று சொல்லப்படுகின்ற சொர்க்கப்பள்ளம் என்கின்ற இடத்தில் மூர்ச்சை அடைந்து பரமபதம் அடைகின்றார்.

26. ஓங்காரமும் குருவும்

இதை வைணவ தத்துவத்தில் எப்படிச் சொல்வார்கள் தெரியுமா? ராமன் லட்சுமணன் சீதை இவர்கள் மூவரும் இணைந்தது பிரணவம் (ஓங்காரம்) என்பார்கள். இதை வால்மீகியும் ராமாயணத்தில் காட்டுகின்றார். காட்டில் மூவரும் நடந்து சென்றது பிரணவமே கால் எடுத்து நடந்து சென்றது போல் இருந்தது என்பார். ராமன் பிரணவத்தின் அகார எழுத்தையும், லட்சுமணன் பிரணவத்தின் மகார எழுத்தையும், சீதை பிரணவத்தின் உகார எழுத்தையும் காட்டுவார்கள். இந்த மூன்றும் சேர்ந்தது தான் பிரணவம். இந்தப் பிரணவத்தைச் சொல்வதற்கு ஒரு குரு வேண்டுமெல்லவா! அந்த குரு தான் அனுமன். ஆழ்வார்களின் அருளிச்செயலை, தத்துவப் பொருளை ஒரு குரு மூலமாக அறியவேண்டும்.

27. மத்வர் சம்பிரதாயத்தில் ஆஞ்சநேயர்

அத்வைதம், துவைதம், விசிஷ்டாத் வைதம் எனும் மூன்று சம்பிரதாயங்களில் அனுமனுக்கு பிரதானமான இடம் உண்டு. அதிலும் ஹரி சர்வோத்தமா, வாயு ஜீவோத்தமா என்ற தாரக மந்திரம் கொண்ட மாத்வ சம்பிரதாயத்தில் ஆஞ்சநேயருக்கு மிகப்பெரிய இடம் உண்டு. எல்லா பிருந்தாவனங்களிலும் அனுமன் சந்நதியும் வழிபாடும் இருக்கும். மாத்வ குருவான வியாசராயர் (வியாசராஜர்) இந்தியாவின் பல இடங்களில் ஆஞ்சநேயர் உருவங்களை பிரதிஷ்டை செய்திருக்கின்றார். வியாச ராயர் ஒரு வருடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆஞ்சநேய கோயிலைக் கட்டினார் என்பார்கள்.

ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் பல வியாச பிரதிஷ்ட ஹனுமான் கோயில்களைக் காணலாம். வியாச பிரதிஷ்டை ஹனுமான் கோயில்களை மற்ற அனுமன் கோயில்களில் இருந்து வேறுபடுத்துவது என்னவென்றால், வியாசரின் சிலைகள் ஒரு கை வானத்தை நோக்கியதாகவும், மற்றொரு கையில் பூவை வைத்திருப்பதுதான். தலைக்கு மேல் செல்லும் வால் முனையில் மணி இருக்கும் என்று ஒரு மத்வ சம்பிரதாய அன்பர் கூறினார்.

28. சுந்தர காண்டமா?அனுமன் காண்டமா?

வால்மீகி ராமாயணத்தின் ஐந்தாவது காண்டம் சுந்தரகாண்டம். சுந்தர காண்டத்திற்கு முதலில் அனுமத் காண்டம் என்று தான் வால்மீகி பெயரிட்டார் ஆனால் இதை அனுமன் முன்னால் பாராயணம் செய்த பொழுது அனுமன் ‘‘என் பெயரை வைக்கலாமா? என்னுடைய பிரபு ராமனின் பெயர் இருக்கும் இடத்தில் இந்த அடியவனின் பெயர் வைப்பது அவருடைய பெருமைக்கு இழுக்கு அல்லவா’’ என்று கடுமையாக ஆட்சேபித்தாராம். வால்மீகி முனிவர் சமாதானம் செய்தும் ஏற்றுகொள்ளவில்லையாம். ‘‘சரி, உங்கள் பெயர் வேண்டாம் என்றால் சுந்தரகாண்டம் என்று பெயர் வைத்து விடுகின்றேன்’’ என்று மாற்றி வைத்த பிறகு அனுமன் அமைதியானார். ஆனால் அவருக்கு தெரியாது, அவருடைய பெயர்களில் ஒன்று சுந்தரன் என்பது.

29. வா சுந்தரா, வா

ராமாயணம் எல்லாம் முடிந்து அரங்கேறிய பிறகு பரம திருப்தியுடன் தன் தாயார் அஞ்சனாதேவியைச் சந்திக்கின்ற பொழுது, ‘‘வா, சுந்தரா’’ என்று அவள் அழைக்க, அப்பொழுதுதான் தனக்கு அப்படி ஒரு பெயர் இருக்கிறது என்பதை அறிந்தாராம். இதை வால்மீகி அறிந்து, அனுமன் பெயரை அந்தக் காண்டத்திற்கு வைத்திருக்கிறார். ஆம் வால்மீகிக்கு ராமாயணத்தில் மிகவும் பிடித்த கதாநாயகன் அனுமன் தான். காரணம் அவருடைய பராக்கிரமமும், அந்த பராக்கிரமத்திற்கு சற்றும் பொருந்தாத வினையம் என்று சொல்லப் படுகின்ற அடக்கமும், ராமனிடத்தில் கொண்ட அளவில்லாத பக்தியும், வால்மீகியை ஆச்சரியப்படுத்தியது.

அதனால் வால்மீகி பகவான் அனுமனின் புகழுக்கு ஒரு காண்டத்தையே ஒதுக்கிவிட்டார். ‘‘கூஜந்தம் ராமராமேதி’’ என்ற ஸ்லோகத்தில் வால்மீகி என்ற கோகிலம் (குயில்) தனக்கே உரித்தான பஞ்சமஸ்வரத்தில் (பஞ்சம) (ஐந்தாவது காண்டமான ஸுந்தர காண்டத்தைக் கூவிற்று என்று கூறப்படுகிறது. மேலும் இக்காண்டம் பாராயணத்திற்குச் சிறந்தது. மந்த்ர சித்தியுடையது. இது மருத்துவர்களால் கைவிடப்பட்ட தீராத வியாதிகளுக்கும் மஹா ஒளஷதமாகவும் விளங்குகிறது.

30. அனுமனை எப்படி வழிபட வேண்டும்?

இனி நிறைவாக அனுமனை எப்படி வணங்க வேண்டும்? என்ற சில விஷயங்களைப் பார்க்கலாம். ஒவ்வொரு மூல நட்சத்திரம் அன்றும், அமாவாசையன்றும் அனுமனை வணங்குவது சிறப்பு. இது தவிர அவருக்கு உரிய நாட்கள் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, மற்றும் சனிக்கிழமை. சனிக்கிழமை வெகு சிறப்பு. வெற்றிலை மாலை, வடைமாலை (நெய் வடை) முதலிய மாலைகளைச் சாற்றி வழிபடலாம். வடக்கே ஜாங்கிரி மாலை போடுவார்கள். செந்தூரம் சாற்றி வழிபடலாம். வெண்ணெய் காப்பு அவருக்கு மிகவும் பிடித்தமானது. அனுமத் ஜெயந்தி அன்று பல கோயில்களில் வெண்ணெய் காப்பு செய்வார்கள்.

அந்த வெண்ணெய் உருகுவதற்குள் நாம் நினைத்த காரியத்தை அனுமன் நடத்தி தருவார் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள் அத்தனை விரைவாக நமக்கு அனுக்கிரகம் செய்பவர் அனுமன். அனுமனின் சிறப்புக்கள் அவ்வளவு எளிதாகச் சொல்லி விட முடியாது. இராமாயணம் மகாபாரதம் போல அனுமனின் சிறப்புகளும் பெரிய காவியமாக விரியும். அதில் சில தகவல்களை மட்டும் நம்முடைய நேயர்களுக்காக இந்தத் தொகுப்பில் தந்திருக்கிறோம். அனுமன் ஜெயந்தி அன்று ஸ்ரீராம பக்த அனுமனை வணங்கி அற்புத அருள் பெறுவோம்.

எஸ். கோகுலாச்சாரி

The post சுந்தரனைத் துதிப்போம் துன்பங்கள் துடைப்போம் :அனுமத் ஜெயந்தி appeared first on Dinakaran.

Tags : Sundaran ,Anumath Jayanti ,Marghazi ,Amman Temples ,Audi ,
× RELATED உள்ளத்தை கவரும் மார்கழி திங்கள்