சென்னை: பூந்தமல்லி பணிமனையில் தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கி நடந்து வருவதாகவும், அடுத்த மெட்ரோ ரயில் சோதனை தொடரும் எனவும் மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களுக்கான (மொத்தம் 108 பெட்டிகள்) ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூ.1,215.92 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது.
இந்நிலையில், ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். மேலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மூன்று பெட்டிகள் அடங்கிய முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அது தொடங்கப்பட்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: ஸ்ரீசிட்டியில் தயாரிக்கப்பட்ட மூன்று பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் கடந்த அக்டோபர் மாதம் பூந்தமல்லி பணிமனைக்கு கொண்டுவரப்பட்டது. தனித்தனியாக கொண்டுவரப்பட்டு பின்னர் இணைக்கப்பட்டு முதல்கட்ட சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து, டிரைவர் இல்லாத ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மூன்று மாத காலம் மெட்ரோ பணிமனையில் 900 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள டெஸ்ட் டிரைவிங் டிராக்கில் (Test Driving Track) வைத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்படுகிறது. தொடர்ந்து அடுத்த 6 மாத காலம் பூந்தமல்லி முதல் போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்லும் பிரதான வழிதடத்தில் குறிப்பிட்ட சில கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் நடந்து வரும் சோதனை ஓட்டத்தில் சிக்னல், பிரேக் பாயிண்ட், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சோதனைகள் நடக்கிறது. இவ்வாறான சோதனைக்கு பிறகு ஓட்டுநர் இல்லாத ரயில் சோதனை ஓட்டம் மணிக்கு 10 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை பணிமனையிலும் 40 கிலோ மீட்டர் முதல் 80 கிலோ மீட்டர் வரை பூந்தமல்லியிருந்து போரூர் வழியிலான வழித்தடத்திலும் சோதனை செய்யப்பட உள்ளது. மேலும் ரயில்கள் எந்த கோளாறுமின்றி இயக்கப்படுவதையும் பயணிகளின் செயல்பாடுகளை கையாளும் திறன் கொண்டதாக இருப்பதையும் உறுதி செய்ய சோதனை ஓட்டங்கள் நடத்தப்படும். இந்த சோதனை ஓட்டங்கள் 2025 டிசம்பர் மாதம் வரை பூந்தமல்லியிலிருந்து போரூருக்கு பயணிகள் போக்குவரத்து துவங்கும் வரை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post பூந்தமல்லி பணிமனையில் தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்: அடுத்தாண்டு டிசம்பர் வரை தொடரும்; மெட்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.