தேன்கனிக்கோட்டை: கெலமங்கலம் அருகே ஏரியில் முகாமிட்டு, ராகி வயலை நாசம் செய்து வந்த 6 யானைகளை, வனத்துறையினர் விடிய, விடிய போராடி பேவநத்தம் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம், சானமாவு வனப்பகுதி என 4 பிரிவுகளாக பிரிந்து, இரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து ராகி, துவரை, அவரை, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. தளி வனப்பகுதி, கும்மளாபுரம் பகுதியில் இருந்து குட்டிகளுடன் 6 யானைகள், நேற்று முன்தினம் ஓசூர் அருகே மத்திகிரி கால்நடை பண்ணை பகுதியில் முகாமிட்டன.
இதையறிந்த வனத்துறையினர், யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். அந்த யானைகள் கெலமங்கலம் அருகே பிதிரெட்டி ஏரியில் தஞ்சமடைந்தன. யானைகளை பார்க்க பொதுமக்கள் கூட்டம் கூடியதால், அங்கே முகாமிட்டிருந்த யானைகளை கண்காணித்து வந்த வனத்துறையினர், நேற்று முன்தினம் இரவு பட்டாசு வெடித்து விரட்டும் பணி மேற்கொண்டனர். அந்த யானைகள் இடம் பெயரும் போது, கிரிசெட்டிபள்ளி, பச்சப்பனட்டி, கோட்டட்டி ஆகிய கிராமங்களில் ராகி, முட்டைகோஸ், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தன. தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை அங்கிருந்து பேவநத்தம் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். தற்போது நொகனூர் வனப்பகுதி வழியாக, ஜவளகிரி வனப்பகுதிக்கு அந்த யானைகளை விரட்ட, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
The post கெலமங்கலம் அருகே ஏரியில் முகாமிட்டிருந்த 6 யானைகள் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.