பெங்களூரு: நடிகர் சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார். கன்னடம், தமிழ் திரைப்பட நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நிலையில், அமெரிக்காவில் உள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் முருகேஷ் மனோகரன் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சிவராஜ்குமாருக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுநீர்ப்பையை முழுவதுமாக அகற்றிவிட்டு, அவரது குடலைப் பயன்படுத்தி செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் முழுமையாக குணமடைவார் என்று தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சையின்போது சிவராஜ்குமாரின் மனைவி கீதா, மைத்துனரும் மாநில கல்வித்துறை அமைச்சருமான மது பங்காரப்பா ஆகியோரும் உடனிருந்தனர். சிவராஜ்குமாரின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுவிட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. வேகமாக குணமடைந்துவருகிறார். மருத்துவர்களின் கண்காணிப்பில் சிவராஜ்குமார் இருக்கிறார். மிகுந்த அர்ப்பணிப்புடனான திறமையான மருத்துவர்கள் குழு, அவரது உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து, விரைவில் குணமடைவதற்காக சிறப்பான சிகிச்சையை அளித்துவருவதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை: அமெரிக்காவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது appeared first on Dinakaran.