- புதுக்கோட்டை
- திருமயம்
- விவசாய வட்டம்
- தொழில்நுட்ப மேலாளர்
- நாகராஜன்
- புதுக்கோட்டை மாவட்டம்
- விவசாய துறை
- புதுக்கோட்டை…
திருமயம்,டிச.25: புதுக்கோட்டை மாவட்ட விவாயிகள் விவசாயத்தில் ரசாயன உரங்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என வேளாண் வட்டார தொழில் நுட்ப மேலாளர் நாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருமயம் அருகே வேளாண் துறை சார்பில் உழவர் திரள் பரவலாக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தின் அட்மா திட்டத்தின் கீழ் நெய்வாசல் வருவாய் கிராமத்தில் உழவர் திரள் பரவலாக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கரிகாலன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் முருகன் பேசும்போது, நடப்பு சம்பா பருவ நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள், வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இடுபொருட்கள் மற்றும் மானிய விவரம் தொடர்பான தகவல்களை விவசாயிகளிடம் எடுத்து கூறினார்.
அதனை தொடர்ந்து கால்நடை துறை மருத்துவர் சின்னராசு பேசும்போது, நாட்டுக்கோழி வளர்ப்பு, கொட்டகை அமைக்கும் முறை, முட்டை மட்டும் இனவிருத்திக்காக நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள், நாட்டுக்கோழிகளை தாக்கும் நோய்கள் மற்றும் தடுக்கும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
மேலும் மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அதை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றியும், கறவை மாடுகளுக்கு தாது உப்புகள் கொடுப்பதன் அவசியம் பற்றி விவசாயிகளிடம் எடுத்து கூறினார்.
பயிற்சியில் கலந்து கொண்டு பேசிய வட்டார தொழில் நுட்ப மேலாளர் நாகராஜன், அனைத்து விவசாயிகளும் விவசாயத்தில் ரசாயன உரங்களை படிப்படியாக குறைத்து இயற்கை, அங்கக உரங்கள், உயிர் உரங்கள், பசுந்தாள் பயிர்களை பயிர் செய்தல், பசுந்தழைகளை பயன்படுத்துதல் வேண்டும் என்றும், நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய இயற்கை விவசாயி வெங்கடாசலம் கள் உழவியல் முறைகள், இயற்பியல் முறைகள், வரப்பு பயிர், ஊடு பயிர், கலப்பு பயிர் செய்தல், பயிர் இடை வெளி பராமரிதல்,உயிரியல் கட்டுப்பாடு முறைகளை கடை பிடித்தல், உயிர் உரங்களை பயன்படுத்துதல், இனக்கவர்ச்சி பொறி, சூரிய விளக்கு பொறி நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாத்தல், பூச்சி மற்றும் நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன் படுத்துதல் வேண்டும் என்றும், குறைந்த அளவே நீர் தேவைப்படும் சிறுதானியங்களை சாகுபடி செய்ய வேண்டும் என கூறினார்.
அதனை தொடர்ந்து தோட்டக்கலை துறையின் சார்பாக பேசிய ராஜீவ்காந்தி தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானிய விலையில் தென்னங்கன்றுகள், பழ செடிகள் வழங்கப்படுகின்றன என்று பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளிடம் கூறினார். நிகழ்ச்சியில் உதவி தொழிநுட்ப மேலாளர் தேவி உழவன் செயலி மற்றும் அதன் பயன்பாடு குறித்து தெரிவித்தார். மேலும் விவசாயிகள் அனைவரும் தங்களது அலைபேசியில் உழவன் செயலி பதிவிறக்கம் செய்து அவற்றில் மானிய விவரங்கள் மற்றும் திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன், உதவித் தொழில் மேலாளர் ராஜு, தேவி ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியின் இறுதியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள் அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டது.
The post புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் விவசாயத்தில் ரசாயன உரங்களை படிப்படியாக குறைக்க வேண்டும் appeared first on Dinakaran.