×

100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்

சிவகங்கை: இளையான்குடி அருகே நூறு நாள் வேலை கேட்டு நாம் தமிழர் கட்சிக் கொடி கட்டிய வாகனத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூர் கிராம மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் பணி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் குளங்கள், வரத்து கால்வாய் சீரமைப்பது மற்றும் மரக்கன்றுகளை நடுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக இக்கிராம மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று அலுவலர்களை சந்தித்து மீண்டும் தங்களுக்கு பணி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். நூறு நாள் வேலை செய்து வரும் இதே கிராமத்தைச் சேர்ந்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாய் அன்னம்மாளும் அவர்களுடன் வந்திருந்தார். மீண்டும் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு 100 நாள் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதையடுத்து அன்னம்மாள் நாதக கொடி கட்டி வந்த வாகனத்தில் ஏறி சென்றார்.

The post 100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Sivaganga ,Naam Tamilar Party ,Ilayankudi ,Mahatma Gandhi ,
× RELATED தடையை மீறி ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சியினர் கைது