×

குப்பையை எரித்தபோது கடையில் விழுந்த தீப்பொறியால் ரூ3 லட்சம் மதிப்பிலான சோபா செட் எரிந்து சாம்பல்: மார்த்தாண்டம் அருகே பரபரப்பு


மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே குப்பையை எரித்தபோது பறந்த தீப்பொறியால் சோபா செட் தயாரிக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பலான சோபா செட்டுக்கள் எரிந்து சாம்பலானது. மார்த்தாண்டம் அருகே பம்மம் வலியக்காட்டுவிளையை சேர்ந்தவர் அஜீஸ் (29). சிராயன்குழி பகுதியில் சோபா செட் தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை தனது கடைக்கு பின்புறம் உள்ள குப்பைகளை தீயிட்டு கொளுத்தினார். நீண்ட நேரம் எரிந்த பின்னர் அதனை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டார். பின்னர் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால் அஜீஸ் தீ வைத்த குப்பையில் காற்றின் வேகத்தால் மீண்டும் தீப்பிடித்து உள்ளது. இதனை யாரும் கவனிக்கவில்லை. இந்த தீப்பொறி பறந்து கடைக்குள் விழுந்துள்ளது. கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த சோபா செட்கள் அதிகமாக இருந்தது.

அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. ஒருகட்டத்தில் கடை முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கடை உரிமையாளர் அஜீசுக்கும், குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அஜீஸ் அதிர்ச்சியடைந்தார். சில நிமிடங்களில் வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதனால் அருகிலுள்ள மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் அஜீசுடைய கடையில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசாமாகிவிட்டன.

சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  குப்பையில் இருந்து பறந்த தீப்பொறியால் கடையில் தீப்பிடித்ததா? அல்லது வேண்டுமென்றே யாரேனும் கடையில் தீவைத்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் இருந்த கடையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குப்பையை எரித்தபோது கடையில் விழுந்த தீப்பொறியால் ரூ3 லட்சம் மதிப்பிலான சோபா செட் எரிந்து சாம்பல்: மார்த்தாண்டம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Aziz ,Valiyakattuvilai, Pammam ,Marthandam.… ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டத்தில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய பைக் பறிமுதல்