சேலம்: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது சேலம் சமூக ஆர்வலர் கோவை மாநகர் போலீசில் ஆன்லைனில் புகார் மனு அனுப்பியுள்ளார். கோவையில் கடந்த 19ம் தேதி பாஜ சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மாநில தலைவர் அண்ணாமலை வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ்மானூஸ் கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 19ம் தேதி கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியபோது, ஒரு தொண்டன் போன் செய்து சரணடைய வந்த 2 பேரை வெட்டப் போறேன். என் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாரு. இப்போ பாஜவினரிடையே எழுச்சி வந்திருச்சு என சந்தோஷமாக அண்ணாமலை சொல்கிறார். இது எழுச்சியா? இல்லை இது தீவிரவாதம்.
போலீஸ் அதிகாரியாக இருந்தவர், இதை தடுக்க உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். கோர்ட்டில் சரணடைவது வழக்கமான நடைமுறை தான். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய மாநில பாஜ தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மாதிரி பொது அமைதிக்கு குந்தம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை பேசியது தொடர்பாக கோர்ட்டில் 2 புகார் அளித்துள்ளோம். தற்போது கோவையில் ஆர்ப்பாட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய அண்ணாமலை மீது வழக்குபதிவு செய்ய தகுந்த ஆதாரங்களுடன் கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கும், தமிழக டிஜிபிக்கும் புகார் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post ‘பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார்’ பாஜ தலைவர் அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் போலீசில் புகார் appeared first on Dinakaran.