×

தந்தை தற்கொலை, நீதிமன்ற காவலில் தாய் 4 வயது பேரனை கண்டுபிடித்து தர பாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு: பெங்களூரு இன்ஜினியர் மரண வழக்கில் தொடரும் மர்மம்

புதுடெல்லி: பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் பெனி பகுதியை சேர்ந்த ஏஐ தொழில்நுட்ப பொறியாளர் அதுல் சுபாஷ் மோடி என்பவருக்கும், உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூர் பகுதியை சேர்ந்த நிகிதா சிங்கானியாவுக்கும் கடந்த 2019 ஜூனில் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு கடந்த 2020 பிப்ரவரி 20ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நிகிதா, உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குழந்தையின் பராமரிப்பு செலவுக்காக மாதம்தோறும் ரூ.40,000ஐ நிகிதாவுக்கு, அதுல் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதில் கடுமையான மன உளைச்சலில் இருந்த அதுல், பெங்களூருவில் இருக்கும் அவரது வீட்டில் கடந்த 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து, அதுல் மோடி தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த பெங்களூரு போலீசார், அரியானா மாநிலம் குருகிராமில் பதுங்கி இருந்த நிகிதாவை கடந்த 14ம் தேதி கைது செய்தனர். அதேப்போன்று நிகிதாவின் தாய் நிஷா, அண்ணன் அனுராக் ஆகிய இருவரும் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் பெங்களூரு அழைத்து சென்ற போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற சூழலில் தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘மகன் இறந்த போன நிலையில் தனது நான்கு வயது பேரனை காணவில்லை. எங்கே போனான் என்பது தெரியவில்லை. எனவே அவனை மீட்டு தருவதுடன் பாதுகாப்பாக இருப்பதையும் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார். இந்த உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் என்.கோடிஷ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு குறித்து உத்தரப்பிரதேசம், அரியானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post தந்தை தற்கொலை, நீதிமன்ற காவலில் தாய் 4 வயது பேரனை கண்டுபிடித்து தர பாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு: பெங்களூரு இன்ஜினியர் மரண வழக்கில் தொடரும் மர்மம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Atul Subhash Modi ,Beni ,Samastipur district ,Bihar ,Nikita Singhania ,Jaunpur ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED ஜாபர் சேட் விவகாரத்தில் முடித்து...