×

வடலூர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி தீவிரம்

வடலூர்:கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி வடலூரில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்தல், விழா பந்தல் அமைத்தல் போன்ற முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் உலக முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக டிசம்பா் மாதத் தொடக்கம் முதலே கிறிஸ்தவா்கள் பல்வேறு கொண்டாட்டங்களிலும், சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனா். வீடுகளில் மின் விளக்குகளுடன் அலங்கார நட்சத்திரங்கள் கட்டுதல், கிறிஸ்துமஸ் குடில் அமைத்தல், தேவாலய பாடகா் குழுவினரை இல்லங்களுக்கு அழைத்து சென்று கிறிஸ்துமஸ் கீதங்களை இசைக்க செய்தல், தினந்தோறும் பஜனை குழுவினர் பாடல்களை பாடிக் கொண்டு தெருக்களுக்கு செல்வது போன்றவைகளுக்கு கிறிஸ்தவா்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனா்.

இந்நிலையில் வருகிற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணிகள், விழா பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடலூர் பகுதியில் திரு இருதய ஆண்டவர் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறும்.இதில் பார்வதிபுரம்,காட்டுக் கொல்லை,ஆபத்தானரணபுரம், தென்குத்து, மருவாய், கருங்குழி, கொளக்குடி, கல்குணம்,பெத்தநாயக்கன் குப்பம்,குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளானோர் கலந்து கொள்வார்கள். இதை முன்னிட்டு ஆலயத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் விதமாக பிரமாண்டமான குடில் அமைக்கப்படுவது வழக்கம்.

மேலும் திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது.இதையடுத்து தேவாலய வளாகத்தில் அலங்காரப் பந்தல் அமைக்கும் பணியும், பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில்,தேவாலயம் முழுவதும் மின்விளக்குகள் உள்ளிட்ட அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இயேசு கிறிஸ்து பிறப்பு நாடகங்கள் வாயிலாகவும், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினம்தோறும் நடைபெற்று வருகிறது.இந்தத் தேவாலய பங்கை சோ்ந்த பங்கு பேரவைகள், இளைஞர்கள், பெண்கள் பணிக்குழு, மரியாயின் சேனைகள், வின்சென்ட் – தே- பால் சபை,பீடச்சிறுவர்கள், அருட் சகோதரிகள், தன்னார்வ தொண்டர்கள் என அனைவரும் ஆர்வமாக கடந்த 15 நாள்களாக இங்கு கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பணிகள் வருகிற திங்கள்கிழமை 23ம் தேதி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை சூசைராஜ்,உதவி பங்கு தந்தைகள் ராஜா சேசுராஜ், பார்ட் அகஸ்டின் ஆகியோர்கள் செய்து வருகின்றனர்.

The post வடலூர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Vadalur ,Christmas ,Jesus Christ ,Christians ,
× RELATED தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை...