×

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள சென்ட் கடையில் ரூ.30.77 லட்சம் 140 கிராம் தங்க கட்டி பறிமுதல்: கஞ்சா வியாபாரிகள் வாக்குமூலத்தின் பேரில் சோதனை; ஹவாலா பணமா என போலீசார் தீவிர விசாரணை

பூந்தமல்லி: சேத்துப்பட்டு பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக ஆகாஷ் மற்றும் கோகுல் ஆகியோரை, 2 நாட்களுக்கு முன்பு, சூளைமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வு செய்தபோது, ஆகாஷ் தனது ஜி-பே மூலம் அசோக் என்பவருக்கு ரூ.20 ஆயிரம் அனுப்பியது தெரியவந்தது. அதன்பேரில், மயிலாப்பூரில் பறவைகள் மற்றும் நாய்குட்டிகளை விற்பனை செய்து வரும் அசோக் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், தங்களது பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது, ஹவாலா பணத்தை கைமாற்றும் புரோக்கர்களுடன் அசோக் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், அசோக் அவருடைய தாய் சுதா (52), லண்டனில் வசித்து வரும் ரிஜிஸ் என்பவரது, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள வீட்டில் வேலை செய்து வருவது தெரியவந்தது. அப்படி வேலை செய்யும் சுதா, தனது முதலாளி அம்மா ரிஜிஸ் உத்தரவுப்படி பல்வேறு நபர்களிடம் இருந்து சுதாவின் மகன் அசோக் ஜி-பே எண்ணிற்கு பணம் அனுப்படுகிறது.

அந்த பணத்தை அசோக், மயிலாப்பூர் மாதவ பொருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் அகமது ஷா (48) மற்றும் அவரது சகோதரன் முகமது கலிமுல்லா (45) ஆகியோரில் ஒருவரிடம் பணத்தை கொடுத்து வந்தது தெரியவந்தது.
பணத்தை பெற்று வந்த அகமது ஷா மற்றம் முகமது கலிமுல்லா ஆகியோர் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் சென்ட் (வாசனை திரவம்) விற்பனை கடை நடத்தி வருகின்றனர். பொதுவாக அசோக், சகோதரர்கள் இருவரும் வீட்டில் இல்லை என்றால் சென்ட் விற்பனை கடையில் பணத்தை கொடுத்து விடுவேன் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சூளைமேடு போலீசார் அசோக் பணம் கொடுத்த மயிலாப்பூரில் வசித்து வரும் அகமது ஷா மற்றும் முகமது கலிமுல்லா ஆகியோர் வீடு மற்றும் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள சென்ட் விற்பனை கடையில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.30 லட்சத்து 77 ஆயிரம் ரொக்கம் மற்றும் 140 கிராம் தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் சென்ட் கடை நடத்தி வரும் சகோதரர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சகோதரர்கள் இருவருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்த பணத்தில் ஒரு பகுதி இந்த பணம் என்றும், தொழில் வளர்ச்சிக்காக இந்த பணத்தை கடையில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர். இருந்தாலும் சூளைமேடு போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகள் உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30.77 லட்சம் ரொக்கம் மற்றும் 140 கிராம் தங்க கட்டிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா பணமாக இருக்குமோ என போலீசார் விசாரிக்கின்றனர்.

The post மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள சென்ட் கடையில் ரூ.30.77 லட்சம் 140 கிராம் தங்க கட்டி பறிமுதல்: கஞ்சா வியாபாரிகள் வாக்குமூலத்தின் பேரில் சோதனை; ஹவாலா பணமா என போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Mylapore Concert Road ,Poonamalli ,Choolaimedu ,Akash ,Gokul ,Sethupattu ,Dinakaran ,
× RELATED ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய...