×

ஸ்ரீபெரும்புதூரில் வாகன தணிக்கையின்போது போக்குவரத்து போலீசார் ஜிபே மூலம் பணம் வசூல்: கூடுதல் எஸ்பியிடம், லாரி உரிமையாளர்கள் புகார்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையின்போது, வாகனங்களுக்கு ஜிபே மூலம் பணம் வசூலிப்பதாக காஞ்சி கூடுதல் எஸ்பியிடம், லாரி உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ், செயலாளர் காதர் மைதீன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் காஞ்சிபுரம் வந்து, காஞ்சிபுரம் கூடுதல் போலீஸ் எஸ்பி மார்ட்டின் ராபர்ட் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கீழ் இயங்கி வரும் பெரும்புதூர் போக்குவரத்து காவல்துறை, ஒட்டுமொத்த காவல்துறைக்கு அவப்பெயரை உருவாக்கும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதை கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். அதாவது, வாகன தணிக்கை ஆய்வு என்ற பெயரில் சாலைகளில் செல்லும் வாகனங்களை மறித்து வாகனங்களின் சக்கரங்களின் அடிப்படையில் தின மாமூல், வார மாமூல், மாத மாமூல் என பேரம் பேசுவதும், அதனோடு குறிப்பிட்டு வாகனங்களை குறிவைத்து மேலே குறிப்பிட்டுள்ள லஞ்ச பேரத்திற்கு உடன்படாத வாகனங்களை மறித்து தொடர்ந்து அபராதம் விதிப்பதும், கண்ணெதிரே அதிகபாரம் ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகளை கண் அசைத்து அனுமதிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

அதேபோன்று, வாகனத்திற்கு மாதம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை மாமூல் கட்டினால், அந்த வாகனங்களை ராஜமரியாதையுடன் அனுமதிப்பதும் தொடர்கிறது. இங்கே, இந்த பகுதிகளில் போக்குவரத்து ஆய்வாளரின் ஓட்டுநர்கள் வாகன உரிமையாளர்களின் தொடர்பு எண்களை வைத்துக்கொண்டு பேசி, ஏஜென்ட் மூலம் ஜிபே மூலமாகவோ, ரொக்கமாகவோ மாமூல் பெற்றுக்கொடுக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் இவர்கள் ஒரே இடத்தில் பணி செய்வதால் தான் இந்நிலைமை அதிகரிக்கிறது.

ஆகவே, 2013 முதல் இன்று வரை இந்த சாலைகள் எல்லாம் பழுதடைவதற்கும், உயிரிழப்பு ஏற்படுவதற்கும் இவர்கள் மாமூலை பெற்றுக்கொண்டு அதிக பாரம் ஏற்றும் வாகனங்களை அனுமதிப்பதே காரணம். இத்தகைய நடவடிக்கைகள் இன்னும் 10 நாட்களுக்குள் தடுத்து நிறுத்த உடனடியாக 24 மணி நேரமும் இரண்டு செக் போஸ்ட் அமைக்க வேண்டும். தங்களின் நேரடி கட்டுப்பாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மேலும் ஆய்வாளரோ, உதவி ஆய்வாளரோ வாகனங்களை ஆய்வு செய்யும்போது, தங்களுடைய சீருடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி தான் ஆய்வு செய்ய வேண்டும் என நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post ஸ்ரீபெரும்புதூரில் வாகன தணிக்கையின்போது போக்குவரத்து போலீசார் ஜிபே மூலம் பணம் வசூல்: கூடுதல் எஸ்பியிடம், லாரி உரிமையாளர்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : JPay ,Sriperumbudur ,Kanchipuram ,SP ,Yuvaraj ,president ,Tamil Nadu State Sand Truck Owners Associations ,Kadhar Maideen ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே பேருந்து மீது...