- வரசனத்
- வரசனாடு
- 3 மலை கிராமங்கல்
- வண்டியூர்
- வீரசின்னம்மல்புரம்
- முத்துராஜபுரம்
- தும்மகுண்டு ஒரட்சி
- தின மலர்
வருசநாடு: வருசநாடு அருகே உள்ள 3 மலை கிராமங்ளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், முத்துராஜபுரம் ஆகிய 3 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 515 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்தப் பகுதியில் தக்காளி, கத்தரி, இலவம்பஞ்சு, கொட்டை, முந்திரி, பீன்ஸ் அவரை எலுமிச்சை உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைகின்ற விவசாய பொருட்கள் தேனி, மதுரை, திண்டுக்கல், ஆண்டிபட்டி, கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமங்களில் இன்றும் சாலை வசதி, பாலம் வசதி, சுடுகாடு வசதி இல்லாமல் உள்ளது.
மேலும், வீடுகளுக்கு தேவையான பட்டாக்களும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளதாகவும், மாநில, ஒன்றிய அரசுகளின் வீடு கட்டும் திட்டத்தில் கூட பயனடைய முடியாமல் உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், “3 தலைமுறையாக இங்கு வாழ்ந்து வருகிறோம். இன்னமும் அடிப்படை வசதிகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது. பல இடங்களில் வீடுகள் கட்டுவதற்கு வனத்துறையினரும் தடை விதிக்கின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. போதிய நிதி இல்லாததால் அடிப்படை வசதிகளை செய்து தர முடியாமல் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்’’ என்றனர். தார்ச்சாலை வசதி வேண்டும்: வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பண்டாரவூத்து மலைகிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த 60 ஆண்டு காலமாக இந்த கிராமத்திற்கு தார் சாலை வசதி இல்லாமல் மிகவும் பரிதவித்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், முதியவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுதும் ஆட்டோக்களில் செல்லும் பொழுதும் வண்டி வாகனங்களை ஜல்லிக் கற்கள் பஞ்சராகி பதம் பார்த்து வருகிறது. இதுகுறித்து தும்மக்குண்டு ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் வீரன் கூறுகையில், வருசநாடு பகுதியில் 20க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும் ரேஷன் பொருட்கள் வாங்க, சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைமை கிராமங்களுக்குச் செல்ல சிரமம் ஏற்படுகிறது. மேலும் ஆட்டோக்களில் செல்ல வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் கொடுத்தும் பாதி தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதே போல் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் மற்றும் பசுமலைத்தேரியில் இருந்து பொன்னன்படுகை கிராமம் வரை சுமார் 5 கி.மீ நீளமுடைய சாலையில், புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுமலைத்தேரி முதல் பொன்னன்படுகை வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
ஆனால் இதில் சில பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் தார்சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதை குண்டும் குழியுமாக இருப்பதால் விவசாயிகள் விளை பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றார்.
The post வருசநாடு அருகே அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?.. கிராம மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.