வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே, அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.60 லட்சம் வரை ஆடு, கோழிகள் விற்பனையாயின. மார்கழி பிறந்தாலும் விற்பனை பெரிதும் பாதிப்பில்லை என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, அய்யலூரில் பிரசித்தி பெற்ற ஆட்டுச் சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை கூடும் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனையாகும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சந்தைக்கு வரும் ஆடு, கோழிகளை திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வாங்கிச் செல்வர்.
குறிப்பாக தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத் பண்டிகை காலங்களில் சந்தையில் விற்பனை களைகட்டும். இதற்கு மாறாக புரட்டாசி, கார்த்திகை மாதங்கள் விற்பனை மந்தமாகவே இருக்கும். கார்த்திகை முடிந்து மார்கழி பிறந்த நிலையில், இன்று காலை சந்தை கூடியது; ஆடுகள், கோழிகள் மற்றும் வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தது. 10 கிலோ செம்மறியாடு ரூ.6500லிருந்து ரூ.7500 வரையும், 10 கிலோ வெள்ளாடு ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரம் வரையும் விற்பனையானது. நாட்டுக்கோழி கிலோ ரூ.450ல் இருந்து ரூ.500 வரையும், சண்டைச் சேவல்கள் தரத்திற்கு ஏற்ப ரூ.3000 முதல் ரூ.10 ஆயிரம் வரையும் விற்பனையாகின. கடந்த கார்த்திகை மாதத்தில் 10 கிலோ செம்மறியாடு ரூ.5500ல் இருந்து ரூ.6500 வரையும், 10 கிலோ வெள்ளாடு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் வரையும் விற்பனையானது.
இது குறித்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கூறுகையில், ‘கார்த்திகை மாதத்தில் வியாபாரம் மந்தமாக இருந்தது. தற்போது மார்கழி பிறந்த நிலையில், இன்று சேல்ஸ் நன்றாக இருந்தது. வரும் காலங்களில் நடைபெறும் சந்தையில் இன்னும் விற்பனை சூடுபிடிக்கும். இன்று நடந்த சந்தையில் ரூ.60 லட்சத்திற்கு ஆடு, கோழிகள் விற்பனையாகின’ என்றனர்.
The post வேடசந்தூர் அருகே அய்யலூர் சந்தையில் ரூ.60 லட்சத்திற்கு ஆடு, கோழி சேல்ஸ்: மார்கழி விற்பனை மோசமில்லை என மகிழ்ச்சி appeared first on Dinakaran.