×

திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க அரசாணை வெளியீடு: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!!

சென்னை: திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து நூலகம் அமைவதற்கான அடிப்படை பணிகளை பொதுப்பணித்துறை செய்ய தொடங்கியது. இதில் முதற்கட்டமாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்க பொதுப்பணித்துறை திட்டம் வகுத்துள்ளது.

இந்நிலையில், நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கி உள்ளார். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ‘காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்’ என அறிவித்திருந்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதலமைச்சர் அவர்கள் அரசாணையின் மூலம் வழங்கியுள்ளார். திருச்சி மாவட்ட மக்களின் சார்பாகவும், டெல்டா மாவட்ட இளைஞர்கள், வாசகர்கள், எழுத்தாளர்களின் சார்பாகவும் முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க அரசாணை வெளியீடு: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!! appeared first on Dinakaran.

Tags : Kalaignar ,Library ,Trichy ,Minister ,Anbil Mahesh ,Chief Minister ,Chennai ,Tamil Nadu government ,Kalaignar Library ,Center ,Kalaignar… ,
× RELATED தஞ்சாவூர் கலைஞர் அறிவாலத்தில்...