கலசப்பாக்கம்: பர்வதமலை மீது ஏற பக்தர்களுக்கு ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயர பர்வத மலை மீது பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். நாளுக்கு நாள் பர்வத மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. படிக்கட்டுகள், பாறைகள், செங்குத்தான ஏணிப்படி, ஆகாயப்படி என கடுமையான பாதைகளை கடந்து தான் கோயிலுக்கு செல்ல வேண்டும். எனவே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி பர்வத மலை மீது ஏற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். மற்ற நேரங்களில் மலையேறும் பாதை மூடப்பட உள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பர்வதமலை மீது ஏற புதிய கட்டுப்பாடு ஜன.1 முதல் அமல் appeared first on Dinakaran.