×

ஜாமீனில் வெளியே வந்தவுடன் நடிகர் சிரஞ்சீவியுடன் அல்லு அர்ஜூன் சந்திப்பு

திருமலை: பெண் ரசிகை பலியான வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜூன், நடிகர் சிரஞ்சீவியை சந்தித்து ஆசி பெற்றார். நடிகர் அல்லுஅர்ஜூன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்பட பிரீமியர் காட்சியின்போது, தியேட்டரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (39) என்பவர் இறந்தார். இதுதொடர்பான வழக்கில் அல்லுஅர்ஜூனை கடந்த 13ம்தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஐகோர்ட்டில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டபோதிலும் 13ம்தேதி இரவு முழுவதும் சிறையில் இருந்த அவர், நேற்று முன்தினம் காலை வெளியே வந்தார். அவரை திரையுலக பிரபலங்கள் சந்தித்து பேசினர். இதற்கிடையில் அல்லு அர்ஜூன் கைதான உடனே நடிகர் சிரஞ்சீவி, அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அல்லு அர்ஜூனை சிறையில் இருந்து வெளியே வர சட்ட ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் நடிகர் அல்லுஅர்ஜூன், தனது மனைவி சினேகாரெட்டி மற்றும் குழந்தைகளுடன் சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்றார். பின்னர், தனது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதற்காகவும், சட்ட ஆலோசனைகள் வழங்கியதற்கும் நன்றி தெரிவித்துவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு அவரிடம் தனது மனைவியுடன் ஆசி பெற்றார். பின்னர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படமும், சிரஞ்சீவி வீட்டிற்கு அவரே காரை ஓட்டிக்கொண்டு சென்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ஜாமீனில் வெளியே வந்தவுடன் நடிகர் சிரஞ்சீவியுடன் அல்லு அர்ஜூன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Allu Arjun ,Chiranjeevi ,Alluarjun ,Revathi ,
× RELATED அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்: தெலுங்கானா முதல்வர் கண்டனம்