திருமயம், டிச.16: அரிமளம் அருகே 15 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்பட்ட குடிநீர் ஊரணியில் கணிசமான நீர் நிரம்பியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதியில் கடந்த காலங்களில் அப்பகுதி மக்கள் பெரும்பாலும் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் நிலைகளில் சேகரித்து குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக காலப்போக்கில் அரிமளம், திருமயம் பகுதி மக்கள் ஊரணி, கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள திறந்தவெளி நீரை குடிநீருக்காக பயன்படுத்தவதை தவிர்த்து வருகின்றனர். இருந்த போதிலும் ஒரு சில கிராமத்தினர் நீர்நிலைகளை பாதுகாத்து அதனை இன்றளவும் குடிநீருக்காக பயன்படுத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே இது போன்ற நீர் நிலைகளில் உள்ள குடிநீரை பயன்படுத்துவதை கைவிட்ட மக்கள் தற்போது தனியார் நிறுவனங்களிடமிருந்து பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் எல்லா மக்களாலும் பணம் கொடுத்து குடிநீர் வாங்கமுடிவதில்லை. அவர்கள் இதேபோன்று ஊரணி நீரைத்தான் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில் அரிமளம் அருகே உள்ள செங்கீரை கிராமத்தில் அப்பகுதி மக்கள் இன்றளவும் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் நல்ல பிள்ளை பெத்தான் ஊரணி என்ற வினோத பெயருடன் இருந்து வருகிறது. இந்த ஊரணிக்கான நீரானது செங்கீரை தைலம் மர வனப்பகுதிக்குள் பெய்யும் மழை நீர் கால்வாய் மூலம் ஊரணியில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே ஊரணி தூர்வாரி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஊரணியை தூர்வார கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி செங்கீரை கிராம மக்களுடன் ஊராட்சி நிர்வாகமும் சேர்ந்து குடிநீர் ஊரணியை சுத்தம் செய்ய முன் வந்தது. இதன் அடிப்படையில் ஜூலை மாதம் முதலில் ஊரணியில் இருந்த நீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு ஊரணிக்குள் இருந்த சேறும் சகதியும் பொக்லைன், டிராக்டர் உதவியுடன் பல நாட்கள் போராடி வெளியில் கொண்டு கொட்டினர். பின்னர் ஊரணியின் மையப் பகுதியில் இருந்த கிணறும் தூர்வாரப்பட்டது. அதேசமயம் ஊரணிக்கு கூடுதலாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு சேதம் அடைந்த ஊரணி சுற்றுச் சுவர்கள் புனரமைக்கப்பட்டு தற்போது புது பொலிவு பெற்றது. இந்நிலையில் காலம் மாறினாலும் செங்கீரை சுற்று வட்டார கிராம மக்கள் பல தலைமுறைகளாக குடிநீருக்காக இன்றளவும் ஊரணி நீரை பயன்படுத்தி வரும் நிலையில் 15 ஆண்டுகள் கழித்து ஊரணி தூர்வாரப்பட்டு புனரமைக்கப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அப்பகுதியில் வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் தூர்வாரப்பட்ட ஊரணிக்கு கணிசமான நீர் வரத்து வந்து ஊரணியில் மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு நீர் நிரம்பியுள்ளது. இனிமேல் குடிநீருக்காக அலையாமல் தூர்வாரப்பட்ட ஊரணியில் ஊற்றுபோல் பெருக்கெடுத்து வரும் நீரையே பயன்படுத்தலாம் என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தள்ளனர்.
The post அரிமளம் அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரி புனரமைக்கப்பட்ட ஊரணியில் நீர் நிரம்பியது appeared first on Dinakaran.