லக்னோ: நாட்டையே உலுக்கிய பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை வழக்கில், பிரிந்து சென்ற மனைவி மற்றும் மாமியார், மைத்துனர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய அதுல் சுபாஷ் (34) சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு பிரிந்து சென்ற தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் செய்த கொடுமைகளே காரணம் என 40 பக்க கடிதம் மற்றும் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.சட்டத்தில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பை தவறாக பயன்படுத்தி தன்னிடமிருந்து பணம் பறிக்க கடுமையான மனஉளைச்சலை தனது மனைவி தந்ததாக சுபாஷ் எழுதிய கடிதம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சுபாஷின் பிரிந்து சென்ற மனைவி நிகிதா சிங்கானியா, மாமியார் நிஷா சிங்கானியா, மைத்துனர் அனுராக் சிங்கானியா ஆகியோர் மீது பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணைக்கு இன்றைக்குள் (டிச.16) ஆஜராகுமாறு உபியின் ஜான்பூரில் உள்ள நிகிதா சிங்கானியா வீட்டின் கதவில் கடந்த வெள்ளிக்கிழமை நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் தலைமறைவான நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
எனவே விசாரணைக்கு ஆஜராகும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்பதை அறிந்த பெங்களூரு போலீசார் அதிரடியாக செயல்பட்டு அரியானாவின் குருகிராமில் பதுங்கியிருந்த நிகிதா சிங்கானியா மற்றும் உபியின் பிரயாக்ராஜில் இருந்த அவரது தாயார் நிஷா, சகோதரர் அனுராக் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பெங்களூரு போலீசார் தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் இந்த கைது நடவடிக்கை மேற்கொண்டதாக உபி போலீசார் நேற்று உறுதிபடுத்தி உள்ளனர். கைதான 3 பேரையும் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, ‘‘சுபாஷ் தனது தற்கொலை கடிதத்தில், பிரிந்து சென்ற தனது மனைவி பெண்களின் பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளை எழுப்பி உள்ளார். ஆண்களின் உரிமைகள் குறித்து சுபாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இது பெரும் விவாதத்தை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து விவாதங்கள் நடக்க வேண்டும்’’ என்றார்.
The post நாட்டையே உலுக்கிய ஐடி ஊழியர் தற்கொலை வழக்கு மனைவி, குடும்பத்தினர் கைது: பெங்களூரு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.