×

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு; 27 மாநிலங்களில் கடுமையான குளிர், மழை, பனிப்பொழிவு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் 27 மாநிலங்களில் கடுமையான குளிர், மழை, பனிப்பொழிவு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் ெவளியிட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள மாலத்தீவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மறுபுறம், வங்காள விரிகுடாவில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 5 கி. மீ. வரை பரவியுள்ள சூறாவளி சுழற்சி தொடர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளி சுழற்சி மேற்கு நோக்கி நகரும். கூடுதலாக, அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தாய்லாந்து வளைகுடா மீது ஒரு சூறாவளி சுழற்சி தெற்கு அந்தமான் கடலில் தீவிரமாக உள்ளது. அதன் தாக்கத்தால் இன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பகுதி உருவாகும். இது அடுத்த 2 நாட்களில் தமிழ்நாட்டின் கடற்கரையை நோக்கி நகரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் லேசானது முதல் மிதமான மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படும். கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், இலட்சத்தீவு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இடியுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும்.

பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் கடுமையான குளிர் இருக்கும். ஜம்மு-காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாபின் வடக்குப் பகுதிகள், அரியானா, சண்டிகர் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் குளிர் அலை ஏற்படும். அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவில் சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் நொய்டா மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகள் கடுமையான குளிர்காற்று வீசும். காற்றில் 11% ஈரப்பதம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட புள்ளி விபரங்களின்படி பார்த்தால், நாடு முழுவதும் 27 மாநிலங்களில் கடுமையான குளிர்காற்று, மழை மற்றும் பனிப்பொழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியா முழுவதும் தொடர்ந்து குளிர் நிலவுகிறது. குளிரில் இருந்து தப்பிக்க தீமூட்டி குளிர்காய்கின்றனர். கடுமையான குளிர், பனிப்பொழிவு, மழை போன்ற காரணங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

The post மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு; 27 மாநிலங்களில் கடுமையான குளிர், மழை, பனிப்பொழிவு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Indian Meteorological Survey ,New Delhi ,Indian Meteorological Centre ,IMT ,Lakshaddev ,
× RELATED தெற்கு வங்கக் கடலில் குறைந்த...