×

எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் பின்வாங்கியது ஒன்றிய அரசு; ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நாளை தாக்கல் இல்லை: மக்களவை செயலக வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருவதால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நாளை தாக்கல் இல்லை என்று மக்களவை செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் மக்களவை ெதாகுதிகள், மாநிலங்களின் சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த நீண்ட காலமாக ஒன்றிய அரசு திட்டமிட்டு வந்தது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. இதை அடிப்படையாக வைத்து ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா வரையறுக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை கடந்த 12ம் தேதி ஒப்புதல் அளித்தது.

அதன்படி மக்களவை, சட்டப்பேரவை தொடர்பாக ஒரு மசோதாவும், யூனியன் பிரதேசங்கள் தொடர்பாக ஒரு மசோதாவும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளன. ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகளின்படி மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். இந்த பொதுத்தேர்தலுக்கு பிறகு அடுத்த 100 நாட்களில் நாடு முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். இதற்காக தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவது கடினம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மக்களவை, சட்டப்பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டால் என்ன செய்வது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

இதற்கு தீர்வு காணும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவில் இடைத்தேர்தல் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது மக்களவை அல்லது சட்டப்பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டால் இடைத்தேர்தல் மட்டுமே நடத்தப்படும்; பொதுத்தேர்தல் நடத்தப்படாது. உதாரணமாக, ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை 2 ஆண்டுகளுக்கு பிறகு கலைக்கப்பட்டால் அந்த மாநிலத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும். அங்கு பதவியேற்கும் புதிய அரசு 3 ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடிக்கும். ஐந்து ஆண்டுகள் நிறைவுக்குப் பிறகு இதர மாநிலங்களோடு சேர்த்து அந்த மாநிலத்தின் சட்டப்பேரவைக்கும் பொதுத்தேர்தல் நடத்தப்படும். மக்களவைக்கும் இதை நடைமுறை பின்பற்றப்படும்.

இதன்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும். ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நாளை (டிச. 16) மக்களவையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. வரும் 20ம் தேதியுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைய உள்ளதால், இந்த மசோதாவை அவசர அவசரமாக தாக்கல் செய்ய ஒன்றிய அரசு ஆர்வம் காட்டியது. எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நாளைய மக்களவை அலுவல் பட்டியலில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதா தாக்கல் குறித்த விபரங்கள் இல்லை என்று மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் பின்வாங்கியது ஒன்றிய அரசு; ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நாளை தாக்கல் இல்லை: மக்களவை செயலக வட்டாரங்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : EU government ,Lok Sabha Secretariat ,New Delhi ,People's Secretariat ,People's Secretariat Circles ,Dinakaran ,
× RELATED அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு...