ஊட்டி : ஊட்டியில் நேற்று காலை முதல் பெய்த மழை காரணமாக கடுமையான பனி மூட்டம் நிலவியதால் பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி – கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது.
இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனபகுதி உள்ளது. வனங்களுக்கு நடுவே உள்ள பைன் பாரஸ்ட் பகுதியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். பைன் பாரஸ்ட் நடுவே புகைப்படம் எடுத்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
சாலையில் இருந்து பைன் மரங்களுக்கு நடுவே கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நடைபாதையில் நடந்து சென்று அணையின் அழகை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பது வழக்கம்.
இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் ஊட்டியில் உள்ள பெஞ்சல் புயல் காரணமாக ஒரு வார காலம் நல்ல மழை பெய்தது.
தொடர்ந்து கடந்த சில நாட்களாக மழையின்றி பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு வேளைகளில் நீர்பனிப்பொழிவும் நிலவி வந்தது. இந்நிலையில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு நேற்று அதிகாலை முதல் ஊட்டியில் பனிமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது.
மேலும் காற்றும் வீசி வரும் சூழலில் ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக வனத்தை ஒட்டி அமைந்துள்ள பைன் பாரஸ்ட் மற்றும் சூட்டிங் மட்டம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. மழை காரணமாக குளிர் நிலவியதால் வெம்மை ஆடைகள் மற்றும் ரெயின் கோட் அணிந்தபடியே சுற்றி பார்த்தனர். சிலர் மழையின் நனைந்த படியே உலா வந்தனர்.
The post பனி மூட்டத்துடன் மழையால் குளிர் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடிய பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம் appeared first on Dinakaran.