×

அமரன் படத்தில் கதாநாயகி பயன்படுத்திய செல்போன் இடம்பெற்ற காட்சி மாற்றப்பட்டது: ஐகோர்டில் ராஜ்கமல் பிலிம்ஸ் தகவல்


சென்னை: நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த அமரன் படத்தில், கதாநாயகி சாய்பல்லவியின் மொபைல் எண் என்று தன்னுடயை எண்ணை காண்பித்ததால் பலர் அந்த எண்ணை தொடர்பு கொண்டனர். இதனால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி சென்னை ஆழ்வார்திருநகரை சேர்ந்த வாகீசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்ததால் தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. படிக்க முடியவில்லை.

பயணிக்க முடியவில்லை. ஏரோப்ளேன் மோடுக்கு மாற்றுவதற்குள் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்து மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள வாழ்வுரிமை, அந்தரங்க உரிமை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதால், ஒரு கோடியே 10 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டுமென்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மனுதாரரின் மொபைல் எண் இடம் பெற்றிருந்த காட்சியில் எண் மறைக்கப்பட்டு, மாற்றப்பட்டுள்ளது.

தணிக்கை குழுவிடம் புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, இன்னும் தொடர்ந்து அழைப்புகள் வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, தொடர் அழைப்புகளால் மனுதாரரின் தனிப்பட்ட உரிமை பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான். இருந்தபோதும், அதற்கு பொது சட்டத்தின் கீழ் தான் நிவாரணம் கோர முடியும். ரிட் வழக்கில் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட முடியாது. இந்த மனுவுக்கு தணிக்கை குழு, ராஜ்கமல் பிலிம்ஸ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post அமரன் படத்தில் கதாநாயகி பயன்படுத்திய செல்போன் இடம்பெற்ற காட்சி மாற்றப்பட்டது: ஐகோர்டில் ராஜ்கமல் பிலிம்ஸ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Amaran ,Rajkamal Films ,iCord ,Chennai ,Kamal Haasan ,Rajkamal Films International ,Rajkumar Periyasamy ,Sivakarthikeyan ,Diwali ,Sai Pallavi ,
× RELATED அமரன் படத்தில் செல்போன் எண் இடம்...