தஞ்சாவூர், டிச 4: தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வீணாகிறது. தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இங்கு அனைத்து பகுதிகளிலும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஜெபமாலைபுரம் குப்பைகிடங்கு அருகே சேக்கடி, சாய்பாபா நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. அந்த பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது. மேலும் தண்ணீர் சாலையில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தேங்கி நிற்கும் தண்ணீரால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தற்போது டெங்கு காய்ச்சல் பரவுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஜெபமாலைபுரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர் appeared first on Dinakaran.