பெரம்பலூர், டிச.5: விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ23.50லட்சம் மதிப்பிலான 19 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 2,000 பைகள் கொண்ட நிவாரண பொருட்களை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அனுப்பி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பெறப்பட்ட ரூ23.50 லட்சம் மதிப்பிலான 19 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 2,000 பைகள் கொண்ட நிவாரண பொருட்களை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று (4ஆம்தேதி) விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் மழைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னர் வங்கக் கடலில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. அதற்காக தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக புயலால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பெறப்பட்ட ரூ23.50 லட்சம் மதிப்பீட்டிலான அரிசி 5 கிலோ,
துவரம் பருப்பு 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, சமையல் எண்ணெய் 1 லிட்டர், கோதுமை மாவு 1 கிலோ, ரசப்பொடி, புளி, மஞ்சள் தூள் உள்ளிட்ட 19 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2,000 பைகள் கொண்ட நிவாரண உதவி பொருட்களை 4 லாரிகள் மூலமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார். கொண்டு செல்லும் நிவாரணப் பொருட்களை விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தேவநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post பெரம்பலூரிலிருந்து ரூ.23.50 லட்சம் நிவாரணப் பொருட்கள் appeared first on Dinakaran.