டாக்கா: வங்கதேசத்தில் நடந்த பேரணியின் போது அந்நாட்டு தேசிய கொடியை அவமதித்ததாக இஸ்கான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கடந்த 25ம் தேதி தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்கப்படாததால் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் கிருஷ்ண தாசின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வக்கீல் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த விவகாரம், இந்தியா, வங்கதேச உறவிலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், கிருஷ்ண தாசின் ஜாமீன் வழக்கு சிட்டகாங் மெட்ரோபாலிட்டன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கிருஷ்ண தாஸ் நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை. கிருஷ்ண தாஸ் தரப்பில் எந்த வக்கீலும் ஆஜராகாததால் விசாரணையை அடுத்த மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி முகமது சைபுல் இஸ்லாம் அறிவித்தார். எனவே ஜாமீன் கிடைக்க இன்னும் ஒரு மாதம் கிருஷ்ண தாஸ் காத்திருக்க வேண்டுமென சிட்டகாங் போலீஸ் ஏடிசி மொய்புர் ரஹ்மான் கூறி உள்ளார். இதற்கிடையே, வங்கதேசத்தை கண்டித்து ங்கள் நடந்து வருகின்றன. திரிபுரா மாநிலம் அகர்தலாவில் போராட்டம் நடத்தி யவர்கள் வங்கதேச துணை தூதரகத்திற்குள் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 3 எஸ்ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய டிவி சேனல்களை தடை செய்ய கோரி வழக்கு
இந்தியாவைச் சேர்ந்த அனைத்து டிவி சேனல்களுக்கும் தடை விதிக்கக் கோரி, டாக்காவைச் சேர்ந்த வக்கீல் ஏக்லாஸ் உத்தின் புயியன் வங்கதேச உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்திய டிவி சேனல்கள் மக்களை தூண்டும் வகையிலும், வங்கதேச கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையிலும் நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் வெளியிடுவதாக மனுதாரர் குற்றம்சாட்டி உள்ளார்.
ஐநா அமைதிப்படை அனுப்ப வேண்டும்
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுதிப் பந்தியோபாத்யாய் பூஜ்ய நேரத்தில் பேசுகையில், ‘‘வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சித்ரவதை செய்து கொல்லப்படுகின்றனர். எனவே வங்கதேசத்திற்கு உடனடியாக அமைதிப்படையை அனுப்ப வேண்டுமென ஐநாவிடம் வலியுறுத்த வேண்டும்’’ என்றார்.
இந்திய தூதருக்கு சம்மன்
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் வங்கதேச துணைத் தூதரகத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்து நாசவேலைகள் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வங்கதேசத்திற்கான இந்திய தூதர் பிரனாய் குமாருக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் நேற்று சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் தோல்வியை காட்டுவதாகவும், இப்போது இருப்பது ஷேக் ஹசீனாவின் வங்கதேசம் அல்ல என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அந்நாட்டு சட்ட விவகாரத்துறை ஆலோசகர் ஆஷிப் நஸ்ருல் எச்சரித்துள்ளார்.
The post வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால் இந்து தலைவரின் ஜாமீன் வழக்கு ஜனவரி 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு: வங்கதேச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.