இளைஞன் ஒருவன் நபிகளாரிடம் வந்து ஏதேனும் தந்து உதவும்படி யாசகம் கேட்டான். நபிகளார் அந்த இளைஞனிடம், ‘‘உன்னுடைய வீட்டில் ஏதேனும் பொருட்கள் இருக்கின்றனவா?’’ என்று கேட்டார். ஒரு போர்வையும் ஒரு குவளையும் இருப்பதாகச் சொன்னான், அந்த இளைஞன். அந்த இரண்டையும் கொண்டுவரச் சொல்லி அவற்றை ஏலம் விட்டார் நபிகளார். கிடைத்த தொகையில் பாதியை வீட்டுச் செலவுக்கு வைத்துக் கொள்ளும்படியும் மீதிப் பாதித் தொகையில் ஒரு கோடரி வாங்கிவரும்படியும் சொல்லி அனுப்பினார். அதேபோல், அந்த இளைஞன் கோடரி வாங்கிவந்ததும் அதற்குத் தாமே பிடி அமைத்துக் கொடுத்து, ‘‘இதை வைத்துக் கொண்டு காட்டில் விறகு வெட்டிப் பிழைத்துக்கொள். பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் என்னை வந்து பார்க்கவேண்டும்’’ என்றார்.பதினைந்து நாள் கழித்து அந்த இளைஞன் வந்தபோது மகிழ்ச்சியுடன் காணப்பட்டான்.
இப்போதுதான் உழைத்துப் பிழைப்பதாகவும் யாரிடமும் யாசகம் கேட்பதில்லை என்றும் கூறினான்.இன்று உழைப்புக்கும் உழைப்பாளர் தினத்துக்கும் பெரும் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், நபிகளார் காலத்திலேயே இஸ்லாமியத் திருநெறி உழைப்பின் மகிமையைச் சொல்லி விட்டது. நபியவர்கள் கூறினார்கள்: ‘‘ஒருவன் தன் கையால் உழைப்பதும் மோசடி செய்யாமல், பொய் பேசாமல் ஒருவன் நடத்தும் வாணிபமும்தான் யாவற்றிலும் சிறந்த சம்பாத்தியம் ஆகும்.’’ ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் தொழில் அமைதி மிகவும் முக்கியமாகும். எப்போது பார்த்தாலும் தொழிலாளர் போராட்டம், வேலை நிறுத்தம், கடையடைப்பு என்று இருந்தால் அந்த நாட்டில் யார்தான் முதலீடு செய்வார்கள்? தொழிலாளர் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் உரிய நேரத்தில் உரிய கூலியைத் தராமல் இழுத்தடிப்பதுதான்.இந்தச் சிக்கலுக்கு நபிகளார் ஓர் அருமையான தீர்வைத் தருகிறார்கள்: ‘‘உழைப்பவரின் வியர்வை உலரும் முன் அவருடைய கூலியைக் கொடுத்து விடுங்கள்.’’வேலை வாங்கிவிட்டுக் கூலியைத் தராமல் இழுத்தடிப்பது மிகவும் கொடுமையாகும்.
உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்கவில்லை எனில் அவனை நம்பியிருக்கும் குடும்பத்தினர் நிலை என்ன ஆகும்?வியர்வை உலரும் முன் கூலியைக் கொடுங்கள் எனும் நபிமொழியில் இன்னொரு நுட்பமும் பொதிந்துள்ளது. வியர்வை வரும் அளவுக்கு உழைக்க வேண்டும். அதாவது, எந்தப் பணியாக இருந்தாலும் கருத்தூன்றிச் செய்ய வேண்டும். இன்று பெரும்பாலான அலுவலகங்களில் பார்க்கலாம். பத்து மணிக்கு அலுவலகம் என்றால் ஆடி அசைந்து பதினோரு மணிக்குத்தான் வருவார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் ஆள் கேன்டீனில்! பிறகு லஞ்ச். அப்படியே மேசையில் சாய்ந்தபடி ஒரு குட்டித் தூக்கம். விழித்ததும் காபி. மணியைப் பார்ப்பார். நாலரை. கொஞ்சம் அக்கம் பக்கத்தில் அரட்டை அடித்துவிட்டு ஐந்து மணி ஆனதும் கிளம்பி விடுவார். அலுவலக வேலை? அது கிடக்குது கழுதை,
மெதுவாகப் பார்த்துக்கொள்ளலாம்.இவ்வாறு சம்பளம் வாங்கிக் கொண்டு சோம்பித் திரிவதை இஸ்லாமியத் திருநெறி அமானித மோசடி. அதாவது, நம்பிக்கைத் துரோகம் என்கிறது. உழைக்காமல் சம்பளம் வாங்குவதை, ஹராம், அனுமதியில்லாத வருமானம் என்றும் தடுத்துள்ளது.நேர்மையான வழியில் உழைப்போம். இறையருளால் உயர்வோம்!
– சிராஜுல் ஹஸன்.
இந்த வாரச் சிந்தனை
‘‘பணியாளர்களின் சக்திக்கு மிஞ்சிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்த வேண்டாம். அவ்வாறு சுமத்த நேரிட்டால் அந்த வேலையில் அவர்களுக்கு நீங்கள் துணை புரியுங்கள்’’ (நபிமொழி).
The post சோம்பித் திரிபவர்கள்! appeared first on Dinakaran.