சென்னை: பெஞ்சல் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் தென்பெண்ணையாறு, ஆரணியாறு, செய்யாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பிவருகிறது. தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் மொத்தமாக 77.23 சதவீதம் நீர்இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவான 224.297 டிஎம்சியில் நேற்றைய நிலவரம்படி 173.222 டிஎம்சி நீர் உள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,134 பாசன ஏரிகளில் 3,315 பாசன ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதன் காரணமாக 2,870 ஏரிகளில் 75 விழுக்காடு கொள்ளளவிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. பாதி அளவில் 2,504 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. 4795 நீர்தேக்கங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாக மிக குறைந்த அளவில் நீர் இருப்பு உள்ளது.
நேற்றைய நிலவரப்படி அதிபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 2040 நீர்தேக்கங்களில் 588 நீர்த்தேக்கங்கள் முழுஅளவை எட்டியுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 506 நீர்த்தேக்கங்களில் 437 நீர்தேக்கங்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் 641 நீர்த்தேக்கங்களில் 370 நீர்த்தேக்கங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 564 நீர்த்தேக்கங்களில் 295 நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் 1644 ஏரிகளில் கடந்த 30ம் தேதி நிலவரப்படி 141 ஏரிகளில் முழு கொள்ளளவு எட்டி இருந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி 529 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. நேற்று ஒரே நாளில் 388 ஏரிகள் முழுகொள்ளளவான 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் மற்றும் பூண்டி நீர் தேக்கங்களில் போதுமான அளவுக்கு நீரின் கொள்ளளவு உள்ளது. மொத்த கொள்ளளவில் 47 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. கூடுதலாக 1235 மில்லியன் கன அடி நீர் வரத்து உள்ளது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளில் ஒட்டுமொத்தமாக 60 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது.
The post 3,315 பாசன ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின: ஒரேநாளில் 4 மாவட்டங்களில் 388 ஏரிகள் நிரம்பின appeared first on Dinakaran.