×
Saravana Stores

தர்மபுரியில் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம்

தர்மபுரி, டிச.2: புயலால் கனமழை கொட்டித்தீர்த்ததால் தர்மபுரியில் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. வேளாண் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அரசின் இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் நெல் 13,067 ஹெக்டேரிலும், தானியங்கள் 61,271 ஹெக்டேரிலும், பயறு வகைகள் 21,080 ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துக்கள் 2,919 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி வட்டாரத்தில் பழைய தர்மபுரி, அன்னசாகரம், குப்பூர், செல்லன்கொட்டாய், அதகபாடி, வத்தல்மலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பழைய தர்மபுரி, குண்டல்பட்டி, செம்மாண்டகுப்பம், முத்துப்பட்டி, செல்லன்கொட்டாய், குப்பூர், வெள்ளாளபட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் ராமாக்காள் ஏரி தண்ணீரை நம்பி நெல் சாகுபடி செய்யப்படுகிறது. பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் புயல்மழை அதி தீவிரமாக பெய்து வருகிறது.

இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை துவங்கிய மழை, ஒரே அளவாக நேற்று இரவு வரை மழை பெய்த வண்ணம் இருந்தது. நேற்று முன்தினம் மட்டும் 31.4 செ.மீ., மழை பெய்தது. புயல்மழை காரணமாக, ராமாக்காள் ஏரி பகுதியில் 50 ஏக்கர் அளவிற்கு பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர் மழையால் சாய்ந்து சேதம் அடைந்துவிட்டது. இதுகுறித்து பழைய தர்மபுரி முனியப்பன் கோயில் பகுதியை சேர்ந்த விவசாயி அமுதா(46) கூறியதாவது: பழைய தர்மபுரியில் உள் ராமாக்காள் ஏரியை ஒட்டிய பகுதியில் விவசாய நிலத்தில் 2 ஏக்கர் நிலத்தை மட்டும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறோம்.

பருவத்திற்கு ஏற்ப நெல், பருத்தி என மாற்றி மாற்றி சாகுபடி செய்து வருகிறோம். ஏரியை ஒட்டிய நிலம் என்பதால், தண்ணீருக்கு பற்றாக்குறை இருப்பதில்லை. எனவே, நடப்பாண்டு 2 ஏக்கரிலும் சம்பா நெல் பயிரிட்டு இருந்தோம். சம்பா பயிரும் நன்கு வளர்ந்து, செழிப்புடன் அறுவடைக்கு தயாராக இருந்தது. கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், வயலில் சேறு அதிகமாக இருந்தது. புயல் மழைக்கு முன்பே அறுவடை செய்ய ஆட்களை அழைத்து வந்தோம். ஆனால், வயல் சேறாக இருந்ததால், நெல் அறுக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் 2 நாட்களாக பெஞ்சல் புயல் மழை கொட்டியது.

இதனால் வயலில் மழைநீர் தேங்கி சம்பா பயிர் தண்ணீர் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. கடந்தாண்டு நெல் அறுவடையில் 70 மூட்டை கிடைத்தது. நடப்பாண்டும் அதே அளவிற்கு கிடைக்கும் என நம்பிக்கையாக இருந்தோம். ஆனால், புயல் மழையால் 2 ஏக்கர் நெல்வயல் சேதமடைந்து விட்டது. ஏரியை ஒட்டிய பகுதி என்பதால், எங்களது நிலத்தில் மட்டும் தான் மழைநீர் அதிகமாக தேங்கி நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும், நெற்கதிர்கள் ஈரப்பதத்தால் முளைத்துவிட்டது. இந்த முறை அறுவடையில் 10 மூட்டை நெல் கிடைத்தாலே பெரிய விஷயம் தான். இதுவரை ஒரு லட்சம் வரை செலவிட்டுள்ளோம். இந்த பயுல் மழை தொடர்ந்தால், மாட்டுக்கு புல் கூட கிடைக்காமல் போய்விடும். இந்த புயல் மழை எங்களது வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது. எங்களது சேதமான 2 ஏக்கர் பயிருக்கு அரசு இழப்பீடு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தர்மபுரியில் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED பட்டுக்கூடு விலை ரூ706 ஆக அதிகரிப்பு