×

ஊட்டியில் 75 ஆண்டுக்கும் மேலாக செயல்படும் அஞ்சல் துறை தபால் பிரிப்பக அலுவலகத்தை மூட முடிவு

*தடுக்குமாறு நீலகிரி எம்பி ராசாவுக்கு கடிதம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் 75 ஆண்டுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் தபால் பிரிப்பக (சார்ட்டிங்) அலுவலகம் மூடுவதற்கு பொதுமக்கள், ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனை கண்டித்து ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் அஞ்சல்துறையின் அஞ்சல் பிரிப்பக (சார்ட்டிங்) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 75 ஆண்டுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த அலுவலகத்தில் தற்போது சுமார் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு நாளொன்றுக்கு சாதாரண தபால், பதிவு தபால் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால்கள் கையாளப்படுகின்றன.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள இந்த பிாிப்பக அலுவலகத்தில் இருந்து மாவட்டம் முழுவதிலும் உள்ள 181 அஞ்சலகங்களுக்கு தபால்கள் தாமதமின்றி அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதேபோல் இங்கிருந்து வெளியூர்கள், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் தபால்களும் பிரிக்கப்பட்டு பைகளில் பாதுகாப்பாக போடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் அஞ்சல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள சுமார் 90க்கும் மேற்பட்ட அஞ்சல் பிரிப்பக அலுவலங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேற்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அஞ்சல் பிரிப்பகம், பொள்ளாச்சி மற்றும் தர்மபுரி என மூன்று பிரிப்பகங்களை வரும் டிசம்பர் 7ம் தேதியுடன் மூட அஞ்சல்துறை இயக்குநரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊட்டியில் மூடப்படும் அஞ்சல் பிரிப்பக அலுவலகம், கோவை அலுவலகத்துடன் இணைக்க உள்ளனர்.

இதனால் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுப்பப்படும் உள்ளூர் தபால்களும் கோவை சென்று பிரிக்கப்பட்டு மீண்டும் நீலகிரியில் உள்ள தபால் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு விநியோகிக்கப்படும். இதனால் பதிவு தபால் உட்பட அனைத்தும் பொதுமக்களை சென்றடைவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படும். இதற்கு அஞ்சல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஊட்டி தபால் பிரிப்பு அலுவலகத்தை மூடும் திட்டம் குறித்தும், அதனை தடுக்க கோரி நீலகிரி தொகுதி எம்பி., ராசாவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல் விரைவு தபால்கள், பதிவு தபால்களை ஒரே சேவையின் கீழ் கொண்டு வர உள்ளதால் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சார்ட்டிங் அலுவலகம் கோவை அலுவலகத்துடன் இணைக்க உள்ளார்கள். இதனால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து தபால்களும் கோவையிலிருந்து பிரிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு வரும் சாதாரண தபாலில் இருந்து முக்கியமான தபால்கள் வரை அனைத்தும் ஒருநாள் தாமதமாக கிடைக்கும்.

குறிப்பாக வேலைவாய்ப்பு உத்தரவு போன்ற முக்கிய ஆவணங்களை ஏந்தி வர கூடிய தபால்கள் உரிய நேரத்தில் பொதுமக்களை சென்றடையாமல் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்.

கோவையில் இருந்து பிரித்து பஸ்கள், வாகனங்கள் மூலம் அனுப்படும் போது தொலைதூர பகுதிகளான கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தபால்கள் முறையாக கையாளாமல் தவற விடவும் வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் போல் ஊட்டி பிரிப்பக (சார்டிங்) அலுவலகம் ஊட்டியிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும். மேலும் விரைவு தபால் மற்றும் பார்சல் பிரிவும் ஊட்டி சார்டிங் அலுவலகத்திலேயே பிரித்து பொதுமக்களுக்கு தபால் சேவைகளை விரைந்து கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஆர்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஊட்டி தபால் பிரிப்பு அலுவலகத்தை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

The post ஊட்டியில் 75 ஆண்டுக்கும் மேலாக செயல்படும் அஞ்சல் துறை தபால் பிரிப்பக அலுவலகத்தை மூட முடிவு appeared first on Dinakaran.

Tags : Post Office of the Post Office ,Neelgiri ,Raasa ,Office ,Ooty Serengras ,Neelgiri district ,Dinakaran ,
× RELATED நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை