×

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த Proba – 3 செயற்கைக்கோள்: ஸ்ரீஹரிகோட்டாவில் டிசம்பர் 4ஆம் தேதி ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூர் : ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த Proba – 3 என்கிற செயற்கைக்கோளை டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோ விண்ணில் அனுப்ப உள்ளது. 23 வருடங்களுக்கு பிறகு ஐரோப்பிய ஆய்வு மையத்தின் முக்கிய திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. சூரியன் குறித்த பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் 100 ஆண்டுக்கு மேல் நடைபெற்று வந்தாலும் சூரியனைச்சுற்றி உள்ள வளிமண்டலம் குறித்த உண்மைகள் வெளிப்படாமல் இருந்து வருகின்றன. நாசா அனுப்பிய ஃபார்க்கர் விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் நெருங்கிவிட்ட நிலையிலும் கரோனா என்னும் வளிமண்டல பகுதியில் ஏற்படும் வெப்ப மாற்றத்திற்கான காரணம் அறியப்படாமல் உள்ளது.

சூரியனின் மேற்பரப்பைவிட சுற்றி இருக்கும் வளிமண்டலம் அதிக வெப்பத்தோடு இருப்பதற்கான காரணம் இன்னும் வெளிப்படாமலேயே உள்ளது. சூரியனின் வளிமண்டலமான கரோனா 20 லட்சம் டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை பெற்றிருப்பதால் தான் சூரிய கதிர்வீச்சு தீவிரத்துடன் இருப்பதும் அதனால் அவ்வப்போது பெரிய மாற்றங்களும் நிகழ்கின்றன. அவற்றை கண்டறியும் பொருட்டு Proba – 3 விண்வெளி திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சூரிய கிரகணம் நிகழும் போது சூர்யா வளிமண்டலத்தை நோட்டமிட்டு பல கேள்விகளுக்கான விடையை கண்டறிவது அறிவியலாளர்களுக்கு முடியாத காரியமாக இருந்து வந்துள்ளது.

அதற்கு தீர்வு காணும் வகையில் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து Proba – 3 என்னும் திட்டத்தின்படி 2 செயற்கை கோள்களை வடிவமைத்துள்ளனர். 200 கிலோ எடைகொண்ட ஒரு செயற்கைகோள் சூரியனின் நிழலை மறைக்கும் வகையிலும் 340 கிலோ எடைகொண்ட கருனோக்ராப் என்னும் மற்றொரு செயற்கைகொள் தொலைநோக்கியாகவும் செயல்பட உள்ளது. அதாவது செயற்கையாக சூரியகிரகண நிகழ்வை விண்வெளியிலிருந்து அவ்வப்போது நிகழ்த்தி ஆராய்ச்சி செய்வது தான் இதன் திட்டம். இந்திய மதிப்பில் சுமார் 1780கோடி மதிப்பீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளித்துறையின் வெற்றிகரமான ராக்கெட்டான பிஎஸ்எல்வி மூலம் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிசம்பர் 4ஆம் தேதி செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் விண்வெளி துறையில் இதுவரை மேற்கொண்டதிலேயே மிகவும் வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. செயற்கை கோலை 600 கிமீ உயரத்தில் ராக்கெட் விண்ணில் நிலை நிறுத்தியபின்னர் 2 செயற்கை கோள்களும் தனித்தனியாக பிரிந்து 19 மணி நேரத்திற்கு ஒரு முறை பூமியை சுற்றிவரும் அப்போது கிடைக்கும் இடைவெளியின் போது ஒரு செயற்கைகோள் சூரியனை மறைத்து மற்றொரு செயற்கைகோள் தொலைநோக்கியால் குவியப்படுத்தி தரவுகளை சேகரிக்கும்.

இந்த புதிய முயற்சிக்கு இஸ்ரோவின் ராக்கெட் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் 23 வருடங்களுக்கு முன்பு 2001 ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் நடத்திய Proba – 1 திட்டத்தையும் இஸ்ரோ செயல்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ ஆதித்யா எல்.1 திட்டத்தை செயல்படுத்தி உள்ள நிலையில் தற்போதைய Proba – 3 திட்டமும் இந்திய விஞானிகளுக்கு புதிய அனுபவத்தை தரும் என கூறப்படுகிறது. டிசம்பர் 4 ஆம் தேதி ராக்கெட் ஏவும் நிகழ்வை மக்கள் நேரடியா பார்ப்பதற்காக இஸ்ரோ தனது இணையதளம் வழியாக முன்பதிவு செய்வதற்கான சுட்டியை வழங்கியுள்ளது.

The post ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த Proba – 3 செயற்கைக்கோள்: ஸ்ரீஹரிகோட்டாவில் டிசம்பர் 4ஆம் தேதி ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : European Space Agency ,ISRO ,Sriharikota ,Bangalore ,Dinakaran ,
× RELATED பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் நாளை...