பெரம்பூர்: வில்லிவாக்கம் பகுதியில் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் விற்ற வில்லிவாக்கம் நார்த் ஜெகநாதன் நகர் பகுதியில் வைத்து ஐடி நிறுவன ஊழியர் சுரேந்தர் (29) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பெங்களூருவைச் சேர்ந்த சஞ்சய் என்பவரிடமிருந்து போதை பொருட்களை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் பெங்களூருக்கு சென்று, ஒசூர் கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (19) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உமர் பாரூக் (19) ஆகிய 2 பேரை பிடித்தனர். இவர்கள் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருவதும், தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு போதை பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இவர்களிடமிருந்து 12 எம்டி எம்ஏ எனும் போதை மாத்திரை, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் விசாரணை நடத்தியதில் பெங்களூரூவில் தங்கியுள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சிலரிடம் போதை பொருட்களை வாங்குவதும், பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவும், பணம் கட்டிய பிறகு குறிப்பிட்ட போதைப் பொருட்களை அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டு சென்று விடுவதும், அதை போட்டோ மற்றும் லோகேஷன் அனுப்பி எடுத்துக்கொள்ளுமாறு கூறி நேரில் பார்க்காத அளவிற்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து ராஜமங்கலம் போலீசார் கைது செய்யப்பட்ட சுரேந்தர், சஞ்சய், முகமது உமர் பாரூக் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மெத்தபெட்டமைன் விற்ற பெங்களூருவை சேர்ந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.