×

கடலூரில் எச்சரிக்கை மீறி மீன் பிடிக்கச்சென்றனர்: நடுக்கடலில் தவித்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு


கடலூர்: எச்சரிக்கையை மீறி படகுகளில் மீன்பிடிக்க சென்றபோது நடுக்கடலில் சிக்கி தவித்த 6 மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீன்வளத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதை மீறி, நேற்றுமுன்தினம் அதிகாலை கடலூர் அருகே தைக்கால் தோணிதுறை பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் 2 நாட்டு படகுகளில் தைக்கால் தோணித்துறையில் இருந்து பரவனாறு நோக்கி மீன் பிடிக்க சென்றுள்ளனர். சித்திரைப்பேட்டை கடல் பகுதியில் அலை சீற்றமாக இருந்ததால் ஒரு படகு கவிழ்ந்தது. அதில் இருந்த 3 மீனவர்களும் நீந்தி மற்றொரு படகில் ஏறி, சித்திரைப்பேட்டை அருகில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் அணையும் தளத்திற்கு கொண்டு சென்று தஞ்சமடைந்தனர்.

அவர்களை உடனடியாக மீட்க தைக்கால் தோணிதுறை பகுதி மக்களும், குடும்பத்தினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோர காவல் படை உதவியை நாடினர். இதையடுத்து நேற்று மாலை கடற்படை ஹெலிகாப்டர் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டது. பின்னர் ஹெலிகாப்டர் சித்திரைப்பேட்டை தனியார் கப்பல் இறங்கு தளத்துக்கு சென்று, 6 மீனவர்களையும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வீடுகளுக்கு சென்றனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று அளித்த பேட்டியில், மீனவர்களை உடனடியாக மீட்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனடிப்படையில் அவர்களை மீட்கும் பணிக்காக இந்திய கடற்படையினரை தொடர்பு கொள்ளப்பட்டது. கடற்படை ஹெலிகாப்டர் மூலம் 6 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டு உடனடியாக அவர்களது சொந்த கிராமமான தைக்கால்தோணித்துறைக்கு வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.

மீட்கப்பட்ட மீனவர்கள் முதல்வருக்கு நன்றி
மீட்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், ‘ஏற்கனவே கடலில் போட்டிருந்த வலையை எடுப்பதற்காக படகில் சென்றோம். நாங்கள் சென்று வலையை எடுத்துவிட்டு, திரும்பி வரும்போது கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் எங்கள் படகு சேதம் அடைந்து உடைந்தது. இதையடுத்து எங்களை காப்பாற்ற படகில் வந்தவர்களின் படகில் ஏறி செல்ல முயன்றபோது, படகு பழுதடைந்ததாலும், சீற்றம் அதிகமாக இருந்ததாலும் திரும்பி செல்ல முடியவில்லை. உயிர் பிழைப்பதற்காக சித்திரைப்பேட்டையில் உள்ள கப்பல் இறங்கு தளத்துக்கு சென்று விட்டோம். அதன் பிறகு முதல்வரின் முயற்சியால் எங்களை காப்பாற்ற ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. அதில் நாங்கள் மூன்று, மூன்று பேராக ஏறி கரைக்கு வந்து சேர்ந்தோம். எங்களை காப்பாற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’ என்றனர்.

The post கடலூரில் எச்சரிக்கை மீறி மீன் பிடிக்கச்சென்றனர்: நடுக்கடலில் தவித்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Fisheries Department ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED அதிக கன மழை எதிர்கொள்ள...