×

நான்கு மாதங்களை கடந்தும் 117 அடி நீர்மட்டத்துடன் ஆழியார் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4 மாதத்திற்கு மேலாக 117 அடியை எட்டியிருப்பதால் விவசாயிகள் மிகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரிப்பால்,மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்ததுடன்,சுமார் 5 மாதத்திற்கு மேலாக அணையின் நீர்மட்டம் 65 அடிக்கும் குறைவாக இருந்துள்ளது. மே மாதம் கோடை மழைக்கு பிறகு, ஜூன் மாத துவக்கத்திலிருந்து பெய்ய துவங்கிய வடகிழக்கு பருவ மழையானது, இரண்டு மாதத்திற்கு மேலாக அவ்வப்போது கன மழையாக பெய்துள்ளது. இதனால், ஆழியார் அணைக்கு வழக்கத்தை விட நீர்வரத்து அதிகமாக இருந்தது.

அதிலும், பல நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து பெய்த கன மழையால், கடந்த ஜூலை மாதம் துவக்கத்தில் அணையின் நீர்மட்டமானது 100 அடியை தொட்டது. அதன்பிறகும் தொடர்ந்து பெய்த கனமழையால், ஜூலை மாதம் 22ம் தேதி 115 அடியை தொட்டது. அதன்பின் சில நாட்களில், முழு கொள்ளளவையும் எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி, மெயின் மதகுகள் வழியாக சில நாட்கள் உபரி நீர் திறக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் மழை குறைந்து வெயிலின் தாக்கம் இருந்தாலும் மலை முகடு நீரோடை வழியாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்திருந்தது. இதனால், மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து பல மாதமாக 118 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளித்தது. கடந்த சில நாட்களாக மழைக்குறைவால், அணைக்கு நீர் வரத்து சற்று குறைந்ததுடன்,பாசனத்துக்கு வினாடிக்கு 450 கன அடி வரை தண்ணீர் திறப்பால், நீர்மட்டம் மெதுவாக சரிய துவங்கியது.

இதில் நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 260 கனஅடியாக இருந்தது. நீர்மட்டம் 117அடியாக உள்ளது. சுமார் 4 மாதங்களுக்கு மேலாக ஆழியார் அணை நீர்மட்டம் 117 அடியை கடந்தும் ஒரே அளவாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரண்டரை ஆண்டுக்கு முன்பு ஆழியார் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இதனால், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு கூடுதல் நாட்கள் தண்ணீர் திறப்பது தவிர்க்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் பல மாதமாக, அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி கடல் போல் ததும்புகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மழையால், பாசனத்துக்கு போதுமான தண்ணீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நான்கு மாதங்களை கடந்தும் 117 அடி நீர்மட்டத்துடன் ஆழியார் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Aliyar dam ,Pollachi ,Coimbatore Pollachi ,Western Ghats ,Dinakaran ,
× RELATED ஆழியார் அணையில் படகு சவாரி மீண்டும் துவங்கப்படுமா?