×
Saravana Stores

ராசிமணல் நீர்மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்படுமா?

தர்மபுரி, நவ.28: தமிழகத்தின் இருபெரும் முதல்வர்கள் ஆய்வு செய்த ஒகேனக்கல் ராசிமணலில் நீர்மின் உற்பத்தி திட்டம் தொடங்கினால், தமிழகத்தின் மின்தேவை போக, கர்நாடகத்திற்கும் மின்சாரம் சப்ளை செய்ய முடியும் என்பதால், இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒகேனக்கல் அருகே ராசிமணல் என்ற இடத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒகேனக்கல் காவிரியில் நீர்மின் திட்டம் (மின்சாரம் எடுக்க) ஏற்படுத்த ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சி முடிந்த பின்னர், சுதந்திர இந்தியாவில் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. காமராஜர் தமிழக முதல்வராக வந்த பிறகு, வாகன வசதிகள் இல்லாத காலத்திலேயே, ஒகேனக்கல்லில் இருந்து ராசிமணல் திட்டு பகுதிக்கு நடந்து சென்று, நீர்மின் உற்பத்திக்கு ஆய்வு செய்து, அடிக்கல் நாட்டினார்.

அதன்பின் ஆட்சி மாற்றத்தால், நீர்மின் உற்பத்தி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பின், இத்திட்டத்தை கேள்விப்பட்டு, ராசிமணலுக்கு சென்றார். உடனே திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் மேற்கொண்டார். அப்போது, அவரது அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றிய பண்ருட்டி ராமச்சந்திரன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் சென்று திட்டப்பணிகளுக்கான ஆய்வு மேற்கொண்டார். 1984ம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்த பின்னர், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியும், இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்தினால், குறைந்தது 300 மெகா வாட் முதல் 360 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இத்திட்டத்தால், தமிழகத்தில் வரும் காலங்களில் மின்சார பற்றாக்குறை இல்லாத நிலை உருவாகும். அதுமட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்திற்கு உபரி மின்சாரத்தையும் வழங்க வாய்ப்பு கிடைக்கும். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில், தலைக்காவிரி என்னும் இடத்தில் 1341 மீட்டர் உயரத்தில், காவிரி ஆறு உற்பத்தியாகி, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக ஓடி, 14 மாவட்டங்களுக்கு சென்று கடலில் கலக்கிறது. இவ்வாறு ஆர்ப்பரித்து செல்லும் காவிரி நீரில், மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒகேனக்கல் ராசிமணல் திட்டு பகுதியில், காவிரி ஆற்றில் நீர்மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதை தமிழக முதல்வர் காமராஜர் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின், பல்வேறு காரணங்களால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதுகுறித்து 18 ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியில் அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். அதன்பிறகு என்னவானது என தெரியவில்லை. தற்போது மின்சார தட்டுப்பாட்டை போக்க, அரசு இந்த திட்டத்தை மீண்டும் கையில் எடுத்து செயல்படுத்த வேண்டும்,’ என்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘ராசிமணலில் 360 மெகாவாட் மின்சாரம் காவிரி நீரில் இருந்து உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. அதற்கான திட்டங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றிய அரசின் மின்வாரிய திட்டப்பிரிவு பொறியாளர்கள் மேற்கொண்டனர். ஆனால், அதற்கு பிறகு அந்த திட்டம் கிடப்பில் உள்ளது. அதுபற்றிய தகவல் இப்போதைக்கு எதுவும் இல்லை,’ என்றனர்.

The post ராசிமணல் நீர்மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Rasimanal ,Dharmapuri ,Okenakal Rasimal ,Chief Ministers ,Tamil Nadu ,Karnataka ,Okanagan… ,
× RELATED தர்மபுரியில் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம்