×
Saravana Stores

நாள் முழுவதும் ஒத்திவைப்பு: அதானி விவகாரத்தால் நாடாளுமன்றம் முடக்கம்

புதுடெல்லி: அதானி விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. அடுத்தடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல்நாளில் எதிர்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர், அதானி விவகாரத்தை முன்வைத்து கோஷமிட்டதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. நேற்று முன்தினம் 75வது ஆண்டு அரசியல் சாசன நாள் கொண்டாடப்பட்டதால், நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படவில்லை. நேற்று நாடாளுமன்ற கூட்டத் ெதாடர் தொடங்குவதற்கு முன்னதாக, காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மணீஷ் திவாரி ஆகியோர் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக்கூறி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தனர். அதில், ‘அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும்.

அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்பது போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடவடிக்கைகள் காலை 11 மணிக்கு தொடங்கியதும், மக்களவையில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக்கூறி எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களவையிலும் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பியதால் பிற்பகல் 11.30 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. மீண்டும் இரு அவைகளும் கூடியதும் மணிப்பூர், அதானி உள்ளிட்ட விவாதங்கள் குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

அதானி பற்றி விவாதிக்க அரசு மறுக்கிறது
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ மோதானி ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. அதானி குழுமம் தொடர்பாக அமெரிக்கா நீதிமன்ற வழக்கு குறித்த உடனடி விவாதத்திற்கு அரசு ஒப்புக்கொள்ளாததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post நாள் முழுவதும் ஒத்திவைப்பு: அதானி விவகாரத்தால் நாடாளுமன்றம் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Adani ,New Delhi ,Houses of Parliament ,Winter Session of Parliament ,Manipur ,
× RELATED அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த...