×

புதுச்ேசரியில் முக்கிய சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் கொண்டுவரப்படும்

புதுச்சேரி, நவ. 28: புதுச்சேரியில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் கொண்டுவரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். புதுச்சேரி சட்டசபையில் உள்ள கேபினட் அறையில் நேற்று முதல்வர் நிருபர்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி பாதுகாப்பாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறி பரங்கிப்பேட்டை, சென்னை இடையே கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி புதுச்சேரியில் மழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை மற்றும் பேரிட ர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வந்துள்ளனர். மக்கள் தொடர்புகொள்ளும் வகையில் உதவி அவசர உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் மக்களை தங்கவைக்க 121 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடையின்றி மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பெய்துள்ள மழையில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை. தற்போது புதுச்சேரியில் 7 சென்டி மீட்டரும், காரைக்காலில் 9 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. கடல் அலை சீற்றம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மீன்பிடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு இடங்களை அடையாளம் கண்டு அதிகாரிகள் அந்தந்தப் பகுதிக்கு சென்று கண்காணித்து வருகின்றனர்.

தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கினால், அதனை வெளியேற்ற 60 மோட்டர் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. மக்கள் எந்த ஒரு சிரமும் இல்லாமல், பாதுகாப்பாக இருக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம், அடுக்குமாடி குடியிருப்புகள் தரமாகவே கட்டப்பட்டுள்ளன. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசின் திட்டங்களை குறை கூறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. திட்ட மதிப்பீடில் முக்கால்வாசி முறைகேடு நடந்திருப்பதாக பொருத்தமின்றி குற்றஞ்சாட்டுவது சரியல்ல. எங்களுக்கு மக்களுக்கான பணிகள் நடக்க வேண்டும். இவர்களுக்கு பதில் சொல்லி கொண்டே இருக்க கூடாது. கடந்த ஆட்சியில் எவுமே செய்யவில்லை. இப்போது முறைகேடு என்று கூறுகின்றனர். சொன்னதையெல்லாம் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் இது போல் பேசி வருகின்றனர். சாலைகள், பாலங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் என அனைத்து உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அரசின் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பி வருகிறோம். காவல்துறை உள்ளிட்ட அரசு துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அதன்படி இதுவரை 3 ஆயிரம் பேர் பணிவாய்ப்பை பெற்றுள்ளனர். சாலைகள் தரமாகவே அமைக்கப்பட்டுள்ளன. தீபாவளி சலுகை பொருட்கள் விநியோகத்தில் டெண்டர் கோராததால் பொருட்கள் வழங்க இயலவில்லை. மழை பாதிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கவலைப்பட தேவையில்லை. துணைநிலை ஆளுநருக்கும் தனக்கும் துளியளவு கூட கருத்துவேறு பாடும் இல்லை. அனைத்து கோப்புகளுக்க்கும் ஒப்புதல் தந்து வருகிறார். மீனவர்கள் மீன்வலைகளை பாதுகாக்கும் வகையில் வலைபின்னும் கூடம் அமைக்கவும் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் கற்கள் கொட்டியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முக்கிய இடங்களில் புதிய மேம்பாலங்கள் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post புதுச்ேசரியில் முக்கிய சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் கொண்டுவரப்படும் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,Rangasamy ,Puducherry Assembly ,
× RELATED புதுச்சேரியில் சூறைக்காற்றுடன்...