×

திருமயம், அரிமளம் பகுதியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை : மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருமயம். நவ.27: திருமயம், அரிமளம் பகுதியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திடீர் விடுமுறை அறிவிப்பால் மாணவர்கள் அவதிப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வானில் கருமேகங்கள் திரண்டு இருளாக காணப்படுகிறது. அதேசமயம் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் சம்பா பயிர்களுக்கு சாதகமான வானிலை நிலவி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நீர் வரத்து ஏதும் இல்லாததால் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் குறைவான அளவில் நீர் கையிருப்பில் உள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று காலை 10 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது.

அதேபோல் திருமயம், அரிமளம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காலை பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் தொடர் மழை காரணமாக வீடு திரும்புவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர். இதனிடையே ஒரு சில அரசு, தனியார் பள்ளிகள் மாலை 3 மணியுடன் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பினர். அதேசமயம் ஒரு சில பள்ளிகள் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காததால் விடுமுறை அளிக்காத பள்ளி வாசலில் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை கூட்டிச் செல்ல குடையுடன் நீண்ட நேரம் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விடுமுறை அளித்த பள்ளியில் இருந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்வது குறித்து முறையாக ஒரு சில பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கைப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நேற்றை போல் இன்றும் பெருமளவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

The post திருமயம், அரிமளம் பகுதியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை : மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirumayam ,Arimalam ,Thirumayam ,Pudukottai district ,
× RELATED அரிமளம் அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு...