×
Saravana Stores

மீனவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றுகிறது

*தூத்துக்குடியில் நடந்த மீனவர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி : மீனவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது என்று தூத்துக்குடியில் நடந்த உலக மீனவர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உலக மீனவர் தின விழா நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். மீன்வளம்- மீனவர் நலத்துறை மண்டல இணை இயக்குநர் சந்திரா வரவேற்றார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த 3 ஆண்டுகளாக மீனவர் தின விழா, இதே இடத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மீனவர்களுக்கான பிரத்யேக வங்கி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி நகரத்திலே மீனவர்களுக்கு என தனியாக வங்கி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இந்த வருடத்தில் இருந்து அனைவருக்கும் அந்த நிதியும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த முறை ராமநாதபுரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தபோது இந்தப்பகுதியில் உள்ள மீனவ மக்கள் நீண்ட காலமாக பட்டா இல்லாமல், தங்களுடைய குடியிருப்பு நிலத்திற்கு உரிமை இல்லாமல் இருந்தார்கள்.

தற்போது அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சிலருக்கு விடுபட்டுள்ளது. விடுபட்டுள்ளவர்களுக்கும் பட்டா வழங்குவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இந்த பட்டாக்கள் எல்லாம் முதலமைச்சரால் தனியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

கலைஞர் முதல்வராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மீனவர்களை அறிவித்ததன் மூலமாகத்தான் மீனவ சமுதாய இளைஞர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியில் படிப்பு போன்றவற்றில் படிக்க எளிதாக வாய்ப்புகள் கிடைக்கிறது. வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.

கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் நல்ல பல திட்டங்களை மீனவர்களுக்கு செய்து வருகிறார். தூதுக்குடி மீன்பிடி துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளது.
அதேபோல் திரேஸ்புரம் கடற்கரை முழுமையாக சீரமைக்கப்பட்டு அங்குள்ள பாலங்கள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. ஹைமாஸ்லைட்கள் கடற்கரையில் அமைத்துள்ளோம். மீன்பிடித்துறைமுகத்தினை இன்னும் தரமானதாக அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.

விழாவில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட்ஜான், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநில மீனவரணி நலவாரிய உறுப்பினர் அந்தோணிஸ்டாலின், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மருத்துவ அணி தலைவர் அருண்குமார்,

சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ் மணி, மாநகர தொழிலாளரணி அமைப்பாளர் முருகஇசக்கி, சிறுபான்மை அணி அமைப்பாளர் சாகுல்ஹமீது, மீனவரணி அமைப்பாளர் டேனியல், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், கவுன்சிலர்கள் ரெக்ஸின், ஜெயசீலி, நாகேஸ்வரி, எடின்டா, பவானி, பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட செயலாளர்கள் டென்சிங், கருப்பசாமி, பகுதி இளைஞரணி அமைப்பாளர் எமல்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் நன்றி கூறினார்.

‘‘தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்”

விசைப்படகு தொழிலாளர்கள், உரிமையாளர்கள், ஏலம் எடுப்போர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற உலக மீனவர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், இயற்கையை எதிர்த்து கடல் தொழிலை செய்பவர்கள் நீங்கள். உயிரை பணயம் வைத்து கடலில் கண்ணும் கருத்துமாக கடமை உணர்வோடு தொழில் செய்கிறீர்கள். உழைக்கும் வர்க்கமாகிய உங்களிடம் நேர்மை எப்போதும் இருக்கும். அப்படிப்பட்ட மக்கள் தான் நீங்கள். நேர்கொண்ட பார்வையோடு நிமிர்ந்த நடையுடன் சங்கங்கள் இணைந்து பணியாற்றுவதன் மூலம் உங்களது கோரிக்கை அரசின் கவனத்திற்கும் எடுத்து செல்வதின் மூலம் அது நிறைவேற்றப்படுகிறது.

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும். என்பதை நீங்கள் நிரூபித்து வருகின்றீர்கள், என்றார்.விழாவில் விசைப்படகு தொழிலாளர் சங்க தலைவர் ஜவகர், துணை தலைவர் ராஜா, செயலாளர் பிரகாசன், துணை செயலாளர் தர்மபிச்சை, பொருளாளர் கிஷோர் திபுர் ஷியாஸ், துணை பொருளாளர் செல்வம், விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சேவியர் வாஸ், ஜார்ஜ், தாமஸ், சாமி, மனோஜ்குமார் உள்பட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post மீனவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றுகிறது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Minister ,Geethajeevan ,Fisherman's Day ,Thoothukudi Thoothukudi ,World Fisherman's Day ,Thoothukudi ,Tuticorin ,
× RELATED இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்துக்கு...