×

காசாவில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடிவாரன்ட்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஹேக்: காசாவில் போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெய்ப் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், காசா மீது போர் தொடுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் இஸ்ரேலில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் தலைவர்கள் இஸ்மாயில் ஹனியே, யாஹ்யா சின்வார் மற்றும் ராணுவ தளபதி முகமது டெய்ப் ஆகியோருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டுமென தலைமை வழக்கறிஞர் கரீம் கான் மனுதாக்கல் செய்தார். கடந்த 6 மாதமாக இந்த வழக்கை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேற்று பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டது. காசாவில் பல போர் குற்றங்களிலும், மக்களை பலியாக்கும் உள்நோக்கத்துடன் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிலும் நெதன்யாகு, கேலன்ட் ஆகியோர் ஈடுபட்டது நிரூபணமாகியிருப்பதால் அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பதாக 3 நீதிபதிகள் அறிவித்தனர். ஹமாஸ் தலைவர்கள் ஹனியே, சின்வார் ஆகியோர் ஏற்கனவே இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட நிலையில், டெய்புக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவரையும் இஸ்ரேல் கொன்றுவிட்டதாக கூறினாலும், ஹமாஸ் அதை உறுதிபடுத்தவில்லை. ஏற்கனவே இதே போல, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக கடந்த ஆண்டு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. உலகில் 125 நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளன. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதன் மூலம் அந்நாடுகளுக்கு நெதன்யாகு இனி சென்றால், அவர் கைது செய்யப்படலாம். இது நெதன்யாகுவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும். அதே சமயம் சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பு நாடாக இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லை. எனவே, சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் பெரிய அளவில் நெதன்யாகுவுக்கு நெருக்கடி தருவது சாத்தியமற்றது. ஹமாசுக்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்ள காசா மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு முழு உரிமை உள்ளது என அமெரிக்க அதிபர் பைடன் ஏற்கனவே கூறி உள்ளார்.

அதுமட்டுமின்றி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகுவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், அந்நீதிமன்றத்திற்கு பொருளாதார தடை விதிக்கப்படும், நிதி வராவிடாமல் தடுக்கப்படும், நீதிமன்ற வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அமெரிக்கா வர தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க எம்பிக்கள் குழு ஏற்கனவே பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. இதே போல ரஷ்ய அதிபர் புடினுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட போதிலும் சமீபத்தில் அவர் அண்டை நாடான மங்கோலியாவுக்கு சென்று திரும்பினார். சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பு நாடாக இருந்தாலும் மங்கோலியா புடினை கைது செய்யவில்லை. எனவே தனக்கென சொந்த காவல்துறை இல்லாததால் சர்வதேச நீதிமன்றத்தால் தனிப்பட்ட முறையில் எதுவும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகள், தங்கள் எல்லையில் நெதன்யாகு வந்தால் நிச்சயம் கைது செய்வோம் என கூறி உள்ளன.

 

The post காசாவில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடிவாரன்ட்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Netanyahu ,Gaza ,International Criminal Court ,Hague ,Defense Minister ,Yoav Galant ,Hamas ,commander ,Mohammed Daeb ,Netherlands ,Israeli ,Prime Minister Netanyahu ,Dinakaran ,
× RELATED மாற்று ஏற்பாடு செய்யும் வரை இஸ்ரேல்...