×

பராமரிப்பின்றி சிதிலமடைந்த அமராவதி அணை பூங்கா: சீரமைக்க வேண்டுகோள்

உடுமலை: அமராவதி அணை பூங்கா உரிய பராமரிப்பின்றி, புதர் மண்டி, விஷ ஜந்துக்கள் வாழும் இடமாக மாறியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடங்களாக மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள அமராவதி, திருமூர்த்தி அணை பகுதிகள் உள்ளன.அமராவதி அணை, அதையொட்டி, முதலை பண்ணை, மூணாறு சாலையில் உள்ள சின்னாறு, கூட்டாறு பகுதிக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எந்த அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படாமல் உள்ளது.

குறிப்பாக, அமராவதி அணையின் கீழ் உள்ள பூங்கா பராமரிப்பின்றி, செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிப் போய் கிடக்கிறது. மக்கள் இளைப்பாற கூட இடமில்லை. கழிவறை வசதி, குடிநீர் வசதி, பார்க்கிங் வசதி உள்ளிட்டவை கிடையாது. இருக்கைகள் உடைந்து கிடக்கின்றன. செயற்கை நீரூற்று பகுதி செயலிழந்து கிடக்கிறது. வளர்ந்து கிடக்கும் புதர்கள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வாழும் இடமாக மாறியுள்ளது. குறைந்தபட்ச பராமரிப்பு கூட இல்லாமல் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். நுழைவு கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இங்கு ஒரு நபருக்கு நுழைவு கட்டணமாக 5 ரூபாயும், இரு சக்கர வாகனத்துக்கு 10 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20ம், லாரி, மினி பஸ், வேன், டெம்போ உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.50ம் வசூலிக்கப்படுகிறது. மேலும், அணைக்கு செல்லும் சாலை சிதிலமடைந்து காணப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் அமராவதி வரலாம் என்ற தகவலின் பேரில் அவசரம் அவசரமாக சாலை போடப்பட்டது. ஆனால் தற்போது கற்கள் பெயர்ந்து காட்சியளிக்கிறது. தடுப்பு கற்கள் உடைந்து கிடக்கின்றன. நடைபாதை சேதமடைந்து மழை பெய்தால் ஆங்காங்கே குளம்போல் மழைநீர் தேங்குகிறது. எனவே அமராவதி பூங்காவையும் பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டு புதர்களை வெட்டி அகற்றியும், சாலை அமைத்தும், உடைந்த இருக்கைகள் சரி செய்தும் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பராமரிப்பின்றி சிதிலமடைந்த அமராவதி அணை பூங்கா: சீரமைக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Amaravati Dam Park ,Udumalai ,Amaravati ,Tirumurthy dam ,Western Ghats ,Tirupur district ,Amaravati dam ,
× RELATED அமராவதி அணை நீர்மட்டம் 87.60 அடியாக உயர்வு