×

பூண்டி ஏரியில் வினாடிக்கு 1,000 கனஅடி உபரி நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

சென்னை: பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சென்னையில் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 1,290 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது, அது 3,500 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர் கனமழையால், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆறு வடிநிலத்தில் உள்ள 336 ஏரிகளில் 62 ஏரிகள் முழுமையாக நிரம்பின.

பூண்டி ஏரி திறக்கப்பட்டுள்ளதால் மணலி, புதுநகர், எண்ணூர், நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ராம்பாக்கம், ஒதப்பை, தாமரைப்பாக்கம், மீஞ்சூர் உள்ளிட்ட 60 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையைப் பொறுத்து படிப்படியாக உபரி நீர் அதிகரிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

The post பூண்டி ஏரியில் வினாடிக்கு 1,000 கனஅடி உபரி நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Tags : Bundi Lake ,Kosasthalai River ,Chennai ,Poondi Lake ,South East Bay of Bengal ,East Indian Ocean ,Dinakaran ,
× RELATED கால்வாய், ஆற்றில் இருந்து வாலிபர், முதியவர் சடலம் மீட்பு