×

வடகிழக்கு பருவமழையால் மானாவாரி பயிர் விளைச்சல் அமோகம்

தேனி, நவ.21: தேனி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மானாவாரி பயிர்களின் விளைச்சல் அமோகமாக உள்ளது. தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு, வைகை, மஞ்சளாறு வடிநில கோட்டங்களின் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயம் மற்றும் தோட்ட காய்கறிகள் பெருமளவில் நடந்து வருகிறது. இது தவிர மழைக்காலங்களில் பெய்யும் மழையை மட்டுமே எதிர்பார்த்து மானாவாரி விவசாயமான சோளம், கம்பு, கடலை உள்ளிட்ட விவசாயமும் பெருமளவில் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனையடுத்து மானாவாரி நிலங்களில் விவசாயிகள் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனி பகுதியில் கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இப்பயிர்கள் நன்கு முளைத்து கதிர்களாகி அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

The post வடகிழக்கு பருவமழையால் மானாவாரி பயிர் விளைச்சல் அமோகம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Northeast Monsoon ,Theni district ,Mullai Periyar ,Vaigai ,Manchalaru ,Dinakaran ,
× RELATED எஸ்.பி.அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி