×
Saravana Stores

செங்கல்பட்டு, திருப்போரூரில் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பிரபல வெற்றி ரியல்ஸ் கட்டுமான நிறுவனத்திலும், திருப்போரூரில் பாலி ஹோஸ் என்ற நிறுவனத்திலும் வருமானவரித்துறையினர், போலீசாரின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரபல தொழிலதிபர் வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான வெற்றி ரியல்ஸ் மற்றும் அவரது கன்ஸ்ட்ரக்சன் அலுவலகம் உள்ளது. இங்கு ேநற்று காலை திடீரென வந்த வருமான வரித்துறை அலுவலர்கள் வேலாயுதம் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் போலீசார் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், வேலாயுதம் என்பவர் காலி நிலங்களை வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து வீட்டுமனை விற்பனை செய்து வருகிறார். அதேபோல், வேலாயுதமே கட்டிடமும் கட்டித்தருகிறார். வேலாயுதத்திடம் இடம் வாங்க வருபவர்களிடம் வங்கிக்கடன் நானே வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறி மூளை சலவை செய்து முன்பணமாக ரூ.50ஆயிரம் முதல் ரூ.1 லட்ச வரை பெற்றுக்கொள்வார். அதற்கான அக்ரிமெண்ட் எதுவும் தரமாட்டார். வெற்றி ரியல்ஸ் என்ற பெயரில் ஒரு பில் மட்டும்தான் கொடுப்பார். மேலும், இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம்வரை இழுத்தடித்து உங்களுக்கு வங்கிக்கடன் கிடைக்க வாய்ப்பில்லை. அதனால், முழுத்தொகையையும் செலுத்தி உங்களது மனையை பத்திரப்பதிவு செய்து கொள்ள சொல்லி வற்புறுத்துவார்.

முழுத்தொகையையும் கட்ட முடியாமல் அந்த வாடிக்கையாளர் கட்டிய பணத்தை திரும்ப கேட்டால் இரண்டு மாதம் வரை அலைக்கழித்து கட்டிய தொகையில் ரூ.30ஆயிரம் பிடித்துக்கொண்டு மீதத்தொகையை தருவார். இதேபோல வீடு கட்டித்தருவதாக கூறி ஒரு தொகையை முன்பணமாக பெற்றுக்கொண்டு வீடு கட்டித்தராமல் அலைக்கழித்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இதுமட்டும் அல்லாமல், வேலாயுதம் நிலஉரிமையாளர்களிடம் ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கும்போது ஒரு தொகையை கொடுத்துவிட்டு லே-அவுட் போட்டபிறகு கொஞ்சம் கொஞ்சமாக விற்றவுடன் பணத்தை கொடுத்துவிடுவதாக கூறி வேலாயுதம் நில உரிமைராளருக்கு சேர வேண்டிய தொகையை முறையாக கொடுப்பதில்லை என்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரிகளை முறையாக செலுத்தாமல் உள்ளதும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததும், ஆவணங்களை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் ஈடுபட்டது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த சோதனையானது காலை சுமார் 9 மணி அளவில் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் பல கோடி மதிப்பிலான ஆவணங்களை வருமான வரித்துறையினர்‌ பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்போரூர்: கீழக்கரையை தலைமையிடமாகக்கொண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாலி ஹோஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த, நிறுவனம் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கும், வேளாண் பணிகளுக்கும் பிளாஸ்டிக் மற்றும் நைலான் குழாய்களை தயாரித்து வருகிறது. அண்மையில், தமிழ்நாடு அரசுடன் ரூ.200 கோடி மதிப்பில் புதிய முதலீடு செய்ய உள்ளதாக புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், நேற்று தமிழ்நாடு முழுவதும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட அலுவலகங்கள், தொழிற்சாலை, கிடங்கு போன்ற இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை அருகே கேளம்பாக்கத்தை அடுத்துள்ள புதுப்பாக்கத்தில் உள்ள தொழிற்சாலையிலும் 10 வருமான வரித்துறை அதிகாரிகள் 2 கார்களில் பகல் 12 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்த கணினிகள், லேப்டாப் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் வரவு, செலவு குறித்த தரவுகளை பென் டிரைவில் சேகரித்துக் கொண்டனர். இரண்டு ஹார்ட் டிஸ்க்குகளையும் அவர்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. சோதனை முழுவதுமாக முடிவடைந்த பிறகே என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்ற விவரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

The post செங்கல்பட்டு, திருப்போரூரில் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,Chengalpattu, Tirupporur ,Chengalpattu ,Vetri Reales Construction Company ,Poly Hose ,Tirupporur ,Vetri Reales ,Velayutham ,
× RELATED கும்மிடிப்பூண்டி தனியார்...