×
Saravana Stores

நெடுஞ்சாலைத்துறை சீரமைக்காமல் அலட்சியம் மணலி சாலைகளில் அடிக்கடி விபத்து: மாநகராட்சியிடம் ஒப்படைக்க கோரி அதிகாரிகள் மனு

மாதவரம்: நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணலி சாலைகளை சீரமைப்பதில் அலட்சியம் காட்டுவதால் மணலி சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில் 15 முதல் 22 வரை 8 வார்டுகள் உள்ளன. இதில் கிழக்கில் மணலி சிபிசிஎல், மேற்கில் வடபெரும்பாக்கம் வடக்கில் பழைய நாப்பாளையம், தெற்கில் சின்ன சேக்காடு என சுமார் 42 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

மணலி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பிரதான போக்குவரத்து சாலைகளான காமராஜ் சாலை, சடையங்குப்பம் ஆகிய சாலைகள் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலும், டி.பி.பி சாலை, மெயின் ரோடு, 200 அடி சாலை, ஆண்டார் குப்பம்- செங்குன்றம் சாலை, மணலி விரைவுச்சாலை, புது நாப்பாளையம் சர்வீஸ் சாலை போன்றவை தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டிலும் உள்ளன.
இப்படி உள்ள சுமார் 15 கிலோமீட்டர் தூர சாலைகளில் தினமும் கன்டெய்னர் லாரி, மாநகர பேருந்துகள், கார், மோட்டார் பைக் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் இந்த சாலைகள் பெரும்பாலானவை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதோடு, விபத்துகளால் பொதுமக்கள் பாதிக்கின்றனர். இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் பலமுறை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து மணலி மண்டல பகுதிகளில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராசு, உதவி செயற் பொறியாளர் தேவேந்திரன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலைகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க கோரி மாநகராட்சி அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை செயலாளரிடம் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘காமராஜ், எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவற்றில் பொருட்களை ஏற்றி இறக்க தினமும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் செல்கின்றன. இவ்வாறு சென்று வரக்கூடிய வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் வாகன வரி, விற்பனை வரி என பொதுமக்களிடம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் வாகனங்கள் எளிதாக செல்ல சாலைகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முறையாக பராமரிப்பதில்லை. இதனால் அடிக்கடி விபத்தும், வாகனங்கள் பழுது ஏற்பட்டு பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக மணலி மண்டலத்தில் நெடுஞ்சாலைத்துறையிடம் உள்ள சாலைகளை மாநகராட்சியிடம் ஒப்படைத்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்து தரமான சாலை அமைக்க வேண்டும்’’ என்றனர்.

 

The post நெடுஞ்சாலைத்துறை சீரமைக்காமல் அலட்சியம் மணலி சாலைகளில் அடிக்கடி விபத்து: மாநகராட்சியிடம் ஒப்படைக்க கோரி அதிகாரிகள் மனு appeared first on Dinakaran.

Tags : Manali ,Madhavaram ,Chennai Corporation ,Manali Mandal.… ,Dinakaran ,
× RELATED மணலி மண்டலத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் சீரமைப்பு