×
Saravana Stores

சபரிமலையில் விரைவில் ரோப் கார்: வனத்துறைக்கு நிலத்தை ஒப்படைத்து கேரள அரசு புதிய உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் நீண்ட வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த ரோப் கார் திட்டப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. வனத்துறைக்கு போதிய நிலத்தை ஒப்படைத்து புதிய உத்தரவை கேரள அரசு பிறப்பித்துள்ளது. சபரிமலையில் ரோப் கார் அமைக்க வேண்டும் என்பது கேரள அரசின் நீண்ட கால திட்டமாகும். பம்பையில் இருந்து சபரிமலைக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கும், ஆபத்து காலங்களில் பக்தர்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதும் தான் இதன் முக்கிய நோக்கமாகும். கடந்த 2011ல் இதற்கான ஆலோசனை தொடங்கப்பட்டது.

2019ல் இந்தத் திட்டத்திற்கான முதல் ஆய்வு தொடங்கியது. ஆனால் சபரிமலை பகுதி இருப்பது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இதற்கு வனத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ரோப் கார் திட்டத்தால் பெருமளவு வனப்பகுதி அழியும் வாய்ப்பிருப்பதாக வனத்துறை தெரிவித்தது. இதனால் இந்தத் திட்டம் அப்போது கைவிடப்பட்டது. ஆனாலும் ரோப் கார் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்ததால் இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்த கேரள அரசு தீர்மானித்தது. ரோப் காருக்காக அமைக்கப்படும் கோபுரங்களின் உயரத்தை அதிகரிப்பதன் மூலம் குறைவாகவே வனப்பகுதி தேவைப்படும் என இரண்டாம் கட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு தேவைப்படும் வனப் பகுதிக்கு பதிலாக வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தை வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கு வனத்துறை சம்மதித்தது. இந்தத் திட்டத்திற்கு 4.5336 ஹெக்டேர் வனப்பகுதி தேவைப்படும். இதே பரப்பளவுக்கு வருவாய் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் கொல்லத்தில் உள்ள 4.5336 ஹெக்டேர் வருவாய் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைத்து நேற்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இன்னும் ஒரு சில வாரங்களில் ரோப் கார் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்படும் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.150 கோடியாகும்.

The post சபரிமலையில் விரைவில் ரோப் கார்: வனத்துறைக்கு நிலத்தை ஒப்படைத்து கேரள அரசு புதிய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Kerala govt ,Thiruvananthapuram ,Kerala government ,Sabarimalai ,
× RELATED சபரிமலைக்கு எத்தனை பக்தர்கள்...